Wednesday, September 30, 2015

அருள் தரும் அழகம்மை  உடனாய வைத்யநாதர் திருகோயில் --வளத்தாஞ்சேரி --ஸ்ரீபெரும்புதூர் 


அன்பர்களே, ரிஷிகளாலும் , முனிவர்களாலும் தேவர்களாலும்  வழிபட பெற்ற உருவாக்கப்பட்ட திருமேனிகள் நமக்கு கிடைக்குமாயின் ,அதை விட பெரும்பேறு வேறென்ன இருக்கிறது ? பாக்கியம் என்ன உள்ளது?

அப்படிப்பட்ட திருமால், பிரம்மனாலும் , சூர்ய சந்திரர்களாலும்,  தேவாரமூவராலும் வழிபடபெற்ற பெருமான் நமக்காக, நம்மை  கடைதேற்றுவதற்காக ,நமக்கு கிடைத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம்,ஸ்ரீபெரும்புதூர் வட்டம் போந்தூர் அஞ்சல், வளத்தாஞ்சேரி என்ற கிராமத்தில்.

சென்னையை சேர்ந்த அடியார் ,  வாருங்கள் புனித யாத்திரைக்கு  அமைப்பாளர் சிவத்திரு சிவதில்லை அவர்களால் இறைவன்
திருக்குறிப்பு உணர்த்தியதன் பேரில் வைத்யநாதர்  என பெயரிடப்பட்டு , அருளாளர் சிவத்திரு ஒளிஅரசு ஐய்யா அவர்களால் தெய்வ தமிழ் வேதங்கள் ஓத,வேள்விகள் முழங்க, நன்னீராட்டு விழாவுடன், நித்திய பூசை வழிபாடுகள் இனிதே துவங்கி வைக்கப்பட்டது.

அன்பர்களே..... 
இனி நாம் செய்ய வேண்டியது  ஒன்று தான்...
நமக்காக பூமியை பிளந்து தோன்றியுள்ள பெருமானை நாம் திரளாக சென்று 
வணங்குவோம்... நோய் நொடியின்றி வாழ்வோம்....வாருங்கள்....


மேலும் இத்திருகோயிலை பற்றிய விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்:9444 500309, 9962415413

இன்பங்களை அள்ளி அள்ளி  தரும் தலம் 


இன்பாம்பிகை உடனுறை இருள்நீக்கீஸ்வரர் திருகோயில் எறையூர் ---வல்லகோட்டை --காஞ்சிபுரம் மாவட்டம்.

புகழ்பெற்ற  வல்லகோட்டை முருகன் திருகோயில் அருகில் இருந்தும் அதிகம் அறியபடாத தலமாகவே உள்ளது இத்திருகோயில்.

பகலவன் தன் இரு மனைவியருடன் வழிபட்ட தலம்.
சிவபெருமான் சூரியனை தன் வல கண்ணாகவும் , சந்திரனை தன் இட கண்ணாகவும் ஏற்ற தலம் .
திருமணத்தடை நீக்கும் பால சந்திர விநாயகர் அருளும் தலம் .

இன்பான்பிகை இன்பத்தை அள்ளி அள்ளி தருபவள்.

இத்திருகோயில் வளாகத்தில் உள்ள புற்று மண் சகல வித நோய்களுக்கும்  அருமருந்து.

இன்னும்  சொல்லிக்கொண்டே போகலாம் இத்திருகோயிலின் மகத்துவத்தை .

இம்மாதிரி திருகோயில்களை நாம் இழப்பதால் தான் அந்நிய மதத்தினர் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகிறது.

அன்பர்களே , அவசியம் சென்று தரிசியுங்கள். பிறகு அடிக்கடி செல்வீர்கள்.
அத்தனை பேரழகு கொண்ட பிரான் இவர்.

தாம்பரம் --ஸ்ரீபெரும்புதூர் மார்க்கத்தில் எறையூர் கூட்டு ரோடிலிருந்து நான்கு
கிலோமீட்டர் தூரத்திலும் , வல்லகோட்டையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திலும் இத்திருகோயில் உள்ளது.









Monday, September 28, 2015

மேல்மணம்மேடு(பூந்தமல்லி) குறும்பலா நாதர் அருள்பெற வாருங்கள் அன்பர்களே 



➨நீண்ட வரிசையில் கால் கடுக்க காத்திருக்க வேண்டாம். மிகுந்த பொருட் செலவு இல்லை.


➨முக்கியமாக *ஜருகண்டி * இல்லவே இல்லை.


➨விஸ்ராந்தியாக இறைவனை எப்போது வேண்டுமானாலும் தரிசனம் செய்யும் வசதி உள்ளது.


➨திரு குற்றாலம் சென்று வழிபட இயலாதவர்கள், இங்கு நமக்காக எழுந்தருளியுள்ள குழல்வாய்மொழியம்மை உடனாய குறும்பலா நாதரை வழிபடலாம்.

➨மிக அருகில், மேல்மணம்மேடு என்னும் இடத்தில் (பூந்தமல்லி --- திருவள்ளூர் ரோடு) கோவில் கொண்டுள்ளார் இவர்.

பயன் படுத்திக்கொள்ளுங்கள் அன்பர்களே!!! குறும்பலா நாதரின் அருள் பெற வாருங்கள்!!!!!


திருகோயில் விரைவில் எழும்ப உள்ளது இப்பெருமானுக்கு.

திருப்பணியில் பங்குபெற விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் :




Sunday, September 27, 2015

மாங்காடு --சிவகொழுந்தீஸ்வரர்--கொழுமணிவாக்கம் 






































மேற்கு நோக்கிய திருகோயில்கள் அரிதினும் அரிது . சென்னையில் மயிலை கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருகோயில்களை அடுத்து , மாங்காடு , கொழுமணிவாக்கம் சிவகொழுந்தீஸ்வரர் திருகோயில் 
மேற்கு பார்த்து அமைந்த தலமாகும் .

அது மட்டுமின்றி இத்திருகோயிலின் கோபுரத்தில் , சமய குரவர்களோடு , சந்தான குரவர்களின் திருமேனியும்
சிலா ரூபமாக அழகுற செதுக்கப்பட்டுள்ளது .

எம்பெருமான் சிவகொழுந்தீஸ்வரர் புலிபாணி சித்தரால் வடிக்கப்பட்டு , வழிபடபெற்றவர் என்பது கூடுதல் தகவல் .
அன்பர்களே, மாங்காடு செல்லும்போது மிக அருகில் இருக்கும் சிவகொழுந்தீஸ்வரரை தரிசனம் செய்ய மறக்காதீர்கள் .

யுகங்கள் பல கண்ட விளம்பூர் யுகம் கண்ட ஈசன் (வேத விளம்பீசன் ). 


.செய்யூர் தாலூகா, காஞ்சீபுரம் மாவட்டத்தில் விளம்பூர் உள்ளது. இங்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தன்னந்தனியாக அருள் புரிந்து வந்தார் ஈசன்.

ஆழி பேரலையால் ஆலயம் முற்றிலும் சிதைந்துவிட, இவருக்கு மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது . அடியார் பெருமக்கள் தேவார திருவாசகங்கள் ஓதி வழிபட்டு வந்த நிலையில்
தற்போது அவரை வழிபட அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது .

பட்டா நிலத்தில் இவர் இருப்பதால் காவல் துறையினரை வைத்து மிரட்டப்படுவதாக முகநூலில் வெளிவந்துள்ள செய்தி மிக்க அதிர்ச்சியளிப்பதாக உள்ளது . தென்னாடுடைய சிவனை , என்னாட்டவற்குமாம் நம் இறைவனை இந்து தேசமாகிய நம் பாரத புனித பூமியில் வழிபட தடையா? இது என்ன கொடுமை ? நாம் பாகிஸ்தானிலா இருக்கிறோம்? இறைவனை வழிபட தடை செய்வதற்கு ?

காலம் இதற்கு கண்டிப்பாக பதில் சொல்லும்! இறை பக்தி ஒன்றே என்றும் வெல்லும்!!!!

Saturday, September 26, 2015

தென்னாடுடைய சிவனே போற்றி!என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி !

கொல்லசேரி (மாங்காடு--குன்றத்தூர் வழி ).இங்கிருந்து செம்பரம்பாக்கம் செல்லும் சாலையில் ஒரு வீட்டின் முன்புறம் வீற்றிருந்து அருள் பாலிக்கும் லிங்கத்திருமேனி இவர்.

அன்பர்களே,மாற்று மதத்தவரானாலும் , முகமதிய தம்பதியர் ஒருவர் இப்பெருமானை பூசித்து வருகிறார்கள் என்பது மகழ்ச்சி தரும் செய்தி!!!

ஆனால் இந்துக்களாகிய நாம் என்ன செய்ய போகிறோம் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி !!!

அன்பே சிவம் !!! அல்லாஹு அக்பர் !!!

Thursday, September 24, 2015

கண்ணொளி  அருளும்  கருணை  கடல் --ராமானுஜபுரம், கபிஸ்தலம் -குடந்தை 





அன்பர்களே , சூரியன், முறையற்ற தட்ஷன் செய்த யாகத்தில் கலந்து கொண்ட சாபம் தீர, தன் இரு மனைவியரான சாயா தேவி , உஷா தேவி ஆகியோர்களுடன் இத்தல இறைவனை வழிபட்டு இழந்த சோபையை  திரும்பப்பெற்றான் என்பது தல வரலாறு .

பகலவன் வழிபட்ட பரமன் அல்லவா? 

கோடி சூர்ய  பிரகாசத்துடன் கருவறையில் எம்பெருமான் விஸ்வநாதர் ,
அன்னை  அகிலாண்டேஸ்வரியுடன் வீற்றிருக்கும் அழகை காண நமக்கு கண் கோடி வேண்டும்.

இப்பெருமானை வழிபடுவதால் , கண் பார்வை தீட்சண்யம்  பெரும்.
வெப்ப சம்பந்தமான நோய்கள் தீரும்.

முன்னர் செய்த பாவங்கள் விலகும்.

எங்கே உள்ளது?

குடந்தை--திருவையாறு பிரதான சாலையில் உள்ளது ராமானுஜபுரம் .

Wednesday, September 23, 2015

ஸ்ரீ கைலாசன் ஈஸ்வரமுடையமஹாதேவர் திருக்கோவில், கேசாவரம். அரக்கோணம் தாலுகா.

முதலாம் குலோத்துங்க சோழன் அரசி ஏழுலகமுடையாள் நேரடிஆணைக்கிணங்க கட்டப்பட்டது.
காலம் (கி.பி. 1070 - 1120இத்திருகோயில் ஒரு நூற்றாண்டாய் சமய மற்றும் சமூக விரோதிகளால் சிதைத்து சேதப்படுத்தப்பட்டு விட்டது .

தற்சமயம் இக்கோவில் பூஜை மற்றும் புனர்நிர்மாணப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன, ஸ்ரீ கைலாசன் ஈஸ்வரமுடைய மஹாதேவர் சேவா டிரஸ்ட் என்ற பதிவுசெய்யப்பட்ட அறக்கட்டளை மூலம் திருப்பணிகள் நடத்தப்படுகின்றன..
தக்கோலம் தலத்திலிருந்து 1 1/2 கி.மீ மற்றும் திருவாலங்காடு, திருமால்பூர், கூவம், இளமையின்கோட்டூர், கடம்பத்தூர் போன்ற எண்ணிலடங்கா சிவதலங்களை சுற்றுவட்டாரங்களில் கொண்டுள்ளது. அரக்கோணம் காஞ்சிபுரம் சாலையில் தக்கோலம் கூட்டு ரோட்டிலிருந்து சுமார் 8 கி.மி தொலைவில் உள்ளது.
திருப்பணிக்கான சேவையில் தங்களை இணைக்க விரும்பிடும் ஆன்மீக அன்பர்கள் தொடர்புகொள்ளவேண்டிய கைபேசி எண்கள்- 8148996154, 9840384201, 9578537949, 9976978492, 8122274612, என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.


சென்னையில் ஒரு ராமேஸ்வரம் --போரூர் 

இங்கிருந்து போருக்கு புறப்பட்டதால் இத்தலம் போரூர் ஆனது.

புறப்பட்டது யார்? ஸ்ரீ ராமபிரான் தான்.இலங்கைக்கு போருக்கு
புறப்படும் முன் தன நித்ய வழக்கப்படி சிவபூசை செய்ய அவர் தவறவில்லை.
இங்கு ராமபிரானுக்கு சிவபெருமான் குருவாக இருந்து வழிகாட்டியபடியால்
இது குருஸ்தலமாக போற்றப்படுகிறது .

ராமருக்கு மட்டுமல்ல!!! நம் வாழ்க்கைக்கும் வழிகாட்டி, இங்கு உறையும் ஸ்ரீ ராமநாத சுவாமியும் , அன்னை பர்வதவர்த்தினியும் தான்.

இறைவனது கம்பீரமான திருமேனி நம் கண்ணை விட்டு அகலாது. கொள்ளை  அழகு .

எங்கே உள்ளது ?

போரூர் முருகன் கோயில்  என்றால் சிறு குழந்தையும் வழிகாட்டும் .
அதே தெருவில் தான் இத்திருகோயிலும்  அமைந்துள்ளது.

அன்பர்களே ஒன்றை மறந்துவிடாதீர்கள் !! ஹனுமான் வழிபட்ட ஹனுமந்தலி ங்கேஸ்வரரும் , இரண்டு தெருக்கள் தள்ளி  அருள்பாலிக்கிறார் .விசாரித்துக்கொண்டு சென்று தரிசனம் செய்யவும்.



திருவாரூர் திருகோயில்கள்

அன்பர்களே , திருவாரூரில் பிறக்க முக்தி  என்பார்கள் ஆன்றோர்கள்.
எண்ணற்ற திருகோயில்கள் ஆரூரில் உள்ளது.பெரிய கோயில்  அனைவரும் அறிந்த ஒன்று.

அறியாத பல திருகோயில்களும் உள்ளன.அவற்றுள் ஒன்று ஸ்ரீ ருத்ரகோடீஸ்வரர் திருகோயில்.
அன்பர்களே, ருத்ரகோடீஸ்வரர் என பெயர் தாங்கிய இறைவன் அரிது.
இங்குள்ள ருத்ரகோடீஸ்வரர் திருகோயில் மகான்கள் பலராலும், முனிவர்களாலும், சித்த புருஷர்களாலும் வணங்கப்பெற்றது. 

மேலும் மயானத்திற்கு எதிரே அமைந்த தலம் இது. பன்மடங்கு சக்தி வாய்ந்ததிருகோயிலாகும். ஆனால் என்னே பரிதாபம்!!!  மிகவும்சிதிலமடைந்து திருப்பணியை துரித கதியில் மேற்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளது ஆலயம்.  

திருவாரூர் பேருந்து நிலையத்திலிருந்து கூப்பிடு தூரத்திலேயே இத்திருகோயில் அமைந்துள்ளது .காட்டு கார தெரு, சோழா திரையரங்கம் அருகில் .

சிறிது தூரத்தில் சோமேஸ்வர சுவாமி திருகோயில் உள்ளது.

மேலும் கீழ வீதியில் ,தேவார பாடல் பெற்ற தூவாய் நாதர் திருகோயிலும் 
அருகே திருநீலகண்டர் கோயிலும் உள்ளது .

படத்தில் காண்பது ருத்ரகோடீஸ்வர பெருமான் . மிக பருந்த ஆகிருதியான திருமேனி காண்போர் மனதை கொள்ளை கொள்ளும் .




Tuesday, September 22, 2015

ஆலங்குடி(குத்தாலம் வட்டம்) பெருமானை காண கண் ஆயிரம் வேண்டும் ..


அன்பர்களே ,வானளாவிய கோபுரங்கள் இல்லை.கொடிமரம் இல்லை,நீண்ட பிரகாரங்கள் இல்லை. இவ்வளவு ஏன்? நித்திய பூசைகள் , ஆராதனைகள்  இல்லை .விளக்கேற்றவும் வழியில்லை..

  ஆயினும் அன்பர்களே, சாநித்யம் சிறிதளவும் குறையாத ஐந்தரை அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் எம்பெருமானை காண உங்களுக்கு ஆவலா? 

இவர் இருப்பது ஆலங்குடி கிராமம். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம், குத்தாலம் --பந்தனல்லூர் பேருந்து பாதையில் , நான்கு கிலோமீட்டர் தூரத்தில் ,ஒரு ஓலை வேய்ந்த குடிசையில் குடிகொண்டுள்ளார் இப்பெருமான் .

இப்பெருமானின் திருபெயரோ , மற்றும் தல விளக்கங்களோ பெற முடியவில்லை .யாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் சுமார் 1000 ஆண்டுகளுக்கும் மேற்பட்டவர் என்பதை அறியமுடிகிறது. அருகில்  மிக சிதிலமடைந்த பெருமாள் கோயில் ஒன்றும் உள்ளது.

அருகில் மக்கள் குடியிருப்பு பகுதி இருந்தாலும், யாரும் சென்று விளகேற்ற கூட முயற்சிக்கவில்லை. அன்பர்களே இது தான் மிகுந்த மனவருத்தத்தை தருகிறது.

எத்தனையோ பொருட்செலவில்  எத்தனையோ தூரத்தில் இருக்கும் திருகோயில்களுக்கு நாம் செல்கிறோம். அன்பர்களே நம் அருகில் இருக்கும் இந்த நிலையில் உள்ள திருகோயில்களை திரும்பியும் பார்ப்பதில்லை நாம் .

இச்செயல் பெற்ற தாயை பட்டினி போட்டுவிட்டு , அயலூரில் அன்னதானம் செய்வதை போன்று உள்ளது.


Monday, September 21, 2015

தடைகளை தகர்த்தெறியும் தன்னிகரற்ற திருத்தலம்---விராலூர் --மயிலாடுதுறை 



காலச்சக்கரத்தை மாற்றியமைக்கும் அற்புத தலம் இது.
பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்தபோது பூசிக்கப்பட்டவர் ஸ்ரீ அனைவரத நடேசர், அம்பிகை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி .

இங்கு குடிகொண்டுள்ள 16 பட்டைகள் கொண்ட பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பஞ்சவர்னேஸ்வரருக்கு பாலாபிஷேகம்  செய்யப்படும் போது பால் ஐந்து நிறங்களாக மாறும் அதிசயம் தற்போதும் நடக்கிறது .

இங்கு தனி கோயில் கொண்டுள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் மடியில் லக்ஷ்மியை அமர்த்தியுள்ளார் . இவர் பல்லவர் காலத்திய  சிற்ப கலைக்கு ஓர் உதாரணம் .

மகாபெரியவா விராலூருக்கு விஜயம் செய்து இரு திருகோயில்களையும் தரிசித்து உள்ளார்.  
இத்துனை சிறப்புடைய இத்திருகோயில் ஆன்மீக அன்பர்களால் திருப்பணி செய்யப்பட்டு ,குடமுழுக்கு விமரிசையாக நடத்தப்பட்டது .

இருப்பிடம்: மயிலாடுதுறை மணல்மேடு சாலையில் உள்ளது பட்டவர்த்தி .இங்கிருந்து சித்தமல்லி செல்லும்சாலையில்  பயணித்தால்  விராலூரை அடையலாம்

தொடர்புக்கு v.v. Kumar
99438 99502
04364---258627

Sunday, September 20, 2015

ஜோதிமலை இறைப்பணி மன்றம்--குடந்தை 

அன்பர்களே, சிவனேய செல்வர்களே ,

அரியலூர் மாவட்டம் , அணக்குடி கிராமம் .குடந்தை--அரியலூர் பாதையில் , மதனத்தூர் அடுத்து நான்கு கிலோமீட்டரில் அமைந்துள்ள இந்த சிறிய கிராமத்தில், சிதைவுற்ற திருக்கோவிலிருந்து பெருமானை பத்திரமாக மீட்டு, குடந்தையை சேர்ந்த ஜோதிமலை  இறைப்பணி மன்றத்தினரால் வழிபாடு இனிதே துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

திருகோயில்  திருப்பணி  துவங்கப்பட  வேண்டும்.

தொடர்புக்கு :திருவடில் குடில்  ஸ்வாமிகள்
                             ஜோதிமலை இறைப்பணி மன்றம்
                               அன்னை கருணை இல்லம்
                                0435----2481 372



Saturday, September 19, 2015

ஊனமுற்றோர்களை ரட்சிக்கும் கூனஞ்சேரி பெருமான் --குடந்தை 


அன்பர்களே, அஷ்ட வக்கிரன் என்னும் இளைஞனின் , தன முன்வினைபயனால்  பெற்ற எட்டு வித கூனல்களை இப்பெருமான் நீக்கி அருளியதால் இங்கு எட்டு லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டான் .

இங்கு வந்து வழிபடுவதால் , குழந்தைகளுக்கு  ஏற்படும் உடல் ஊனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்  அகலும். பாலாரிஷ்டம் எனப்படும் இளவயது மரணம் தடுக்கப்படும்.

உடல் ஊனம் மட்டுமின்றி நம் மன ஊனங்களையும் நீக்கி ,மெய்ஞானம் அருள்கிறார் இத்தல பெருமான் கைலாசநாதர் .

இங்கு அமைந்துள்ள எட்டு  லிங்கங்களையும் ஒரு சேர தரிசிப்பது , நம் பிறவி பயனாகும் .

எங்கு உள்ளது?

சுவாமி மலை அருகே, தேவார பாடல் பெற்ற திருவைகாவூர் செல்லும் வழியில் உள்ளது . குடந்தையிலிருந்து  நேரடி பேருந்து வசதி உள்ளது .

Thursday, September 17, 2015

உருக்குலைந்த நிலையில் உமையொரு பாகன் திருகோயில் --அன்னவாசல் -- குடவாசல் 


அன்பர்களே, ஒரு காலத்தில் ஊருக்கே படியளக்கும்,  அன்னமளிக்கும் , நெல் வயல்கள் சூழ்ந்து இருந்ததால், அன்னவாசல் என்றே இத்தலம் அழைக்கப்பட்டது .

இன்றோ?..... இங்கே கோயில் கொண்டுள்ள பெருமானுக்கே ஒரு வேளை நைவேத்தியத்திற்கு வழி இல்லாத நிலையில் மிக சிதைந்து உள்ளே செல்வதற்கு கூட பாதையின்றி , முட்கள்  செடி கொடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு , வேதனையுடன் வழிபட வேண்டிய நிலை.

குடந்தை திருவாரூர் பாதையில் குடவாசல் அருகே அன்ன வாசல் உள்ளது.
சேங்காலிபுரம் செல்லும் வழி. புதுக்குடியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் .

அன்னவாசல் பெருமான் என்று குடமுழுக்கு காண்பார்? அவருக்கே வெளிச்சம் .



கண் கொடுத்த வணிதம் ----கொரடாச்சேரி ---திருவாரூர் 

அன்பர்களே,
திருவாரூர் தஞ்சை மார்க்கத்தில் கமலாபுரம் அருகில் உள்ளது, கண் நோய்கள் 
தீர்த்து அருளும் நயன வரதேஸ்வரர் திருகோயில். குடமுழுக்கு செய்யப்பட்டு மிக சிறப்பாக விசேஷங்கள் அனைத்தும் நடைபெறுகிறது.

அதன் அருகில் பலகாலமாக வீற்றிருக்கும் பெருமான் இவர்.  இலந்தை மரத்தடியில் வீற்றிருந்தார். புண்ணியவான் யாரோ மரத்தை வெட்டிவிட,
தற்போது சிறிய கட்டடம் ஒன்று எழுப்பப்பட்டு அருள்புரிகிறார்.

பெருமானின் கம்பீர தோற்றம் மனதை விட்ட அகலவில்லை.
அன்பர்களே, சென்று தரிசனம் செய்யுங்கள். புராதன பெருமை பெற்ற பல திருகோயில்கள் சுற்றிலும் அமைந்துள்ளன .




Wednesday, September 16, 2015

தாண்டவர் தோட்டம் கண்ட தயாபரன்--தண்டந்தோட்டம்


திருநாகேஸ்வரம் ராகு தலம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதன் அருகில் முருகன்குடி வட்டத்தில், புகழ் பெற்ற அம்மன்குடி அருகில் உள்ளது தண்டம்தோட்டம் நடன புரீஸ்வர பெருமான் திருகோயில்.

தாருகா வன முனிவர்களுக்காக நடனமாடிய தலம் இது. புகழ் பெற்ற நடராஜர் சிலை களவாடப்பட்டது ஆன்மிக உலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பு.

அப்படி ஒரு பேரழகு பெருமான் இவர்.

அள்ளி  முடிந்த சடையுடன் காணப்படும் இவரது விக்ரகம் உலக புகழ் பெற்றதாகும். பொதுவாக விரித்த சடையுடன் தான் நடராஜர் எங்கும் காணப்படுவார்.

நடனமாடிய பொது அவர் காலில் இருந்து சிதறிய மணிகளை விநாயக பெருமான் எடுத்து மீண்டும் தன தந்தையின் கால்களில் கட்டி விட்டாராம் .

இவர் மணி கட்டிய விநாயகர் என்ற பெயரில் அருகே தனியாக கோயில் கொண்டுள்ளார்.
அன்பர்களே, தவற விடாதீர்கள்!! தரிசிக்க!!

Monday, September 14, 2015

தண்ணீர் குளம் மேவிய தயாபரன் 

திருவள்ளூர் மாவட்டம் , தொழுவூர் வட்டம் ,தண்ணீர் குளம் கிராமம் .

நீர் சூழ்ந்த நெடுவயல்களால் நிரம்பப்பெற்றதால் தண்ணீர் குளம் என்று அழைக்கப்படுகிறது.

இங்கு பன்நெடுங்காலமாக வெட்டவெளியில்  பரிபாலித்து வருகிறார்  மங்களாம்பிகை சமேத ஆபத்சஹாயேஸ்வரர்.

பார்க்க பார்க்க பரவசம் ஏற்படுத்தும் கம்பீரமான திருமேனி .

தற்போது அன்பர்களால் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் திருகோயில் அமைக்க முயன்று வருகிறார்கள் அடியார் பெருமக்கள்.

அருகில் உள்ள அடியார் திரு.உதயகுமார் அவர்களின் கைவண்ணத்தில் ஜொலிஜொலிக்கும் எம்பெருமான் ஆபத்சகாயேஸ்வரர்  (படத்தில்).

தொடர்புக்கு திரு உதயகுமார் செல்:9940449903

செல்லும் வழி: ஆவடி--திருவள்ளூர்  வழித்தடத்தில் புட்லூர் என்னும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி , வலப்புறம் 3 கிலோமீட்டர்  தூரத்தில் தண்ணீர்குளம் 
கிராமம் உள்ளது .

அன்பர்களே, ஆபத்துகளிலிருந்து நம்மை காக்கும் அம்மைஅப்பனை 
தரிசிக்க மறக்காதீர்கள் .



 

Sunday, September 13, 2015

மகான் ஸ்ரீ பாடகச்சேரி ஸ்வாமிகள்--குடந்தை 
பாடகச்சேரி,  மகான்ஸ்ரீராமலிங்க ஸ்வாமிகள் வாழ்ந்த கிராமம். ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமிகள் குடந்தை நாகேஸ்வர சுவாமி கோயிலுக்கு திருப்பணிகள் செய்து குடமுழுக்கு செய்வித்து அழியா புகழ் பெற்றவர். வேறு பல கோயில்களின் திருப்பணிகளுக்கு காரணமாகயிருந்தவர். தமிழகமெங்கும் பலரையும் பல திருப்பணிகளில் ஈடுபடுத்தியவர். அவரது மகிமைகளையும் பெருமைகளையும் எல்லையற்ற தெய்வீக சக்திகளையும் இன்றும் பலர் பசுமையாக நினைவு கூறுகின்றனர். அவருக்காக ஒரு மடம் அவர் தங்கியிருந்த இடத்தில் கட்டப்பட்டு அவர் சமாதியான ஆடிபூரம், மற்றும் பவுர்ணமி நாட்களில் அன்னதானம் வெகுவிமர்சையாக கொடுக்கப்படுகிறது. சுவாமிகள் எண்ணற்ற வியாதிகளை குணமாக்கியவர். எந்த வசதியும் இல்லாத அந்த காலத்திலேயே ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தவர். அவருடைய ஜீவ சமாதி திருவற்றியூரில் பட்டினத்தார் சமாதிக்கு பக்கத்தில் உள்ளது. அவர் பைரவர் உபாசகர். அவர் அன்னதானம் செய்யும் பொழுது நூற்றுக்கணக்கான நாய்கள் திடீரென்று மனிதர்கள் போல இலைகளில் உணவு அருந்தி நொடியில் எங்கோ சென்றுவிடுமாம். இன்றும் அவருடைய மடங்களில் அந்த அதிசயம் நடைபெறுகிறது. .

அவர் வாழ்த்த பாடகச்சேரி கிராமத்தில் பெருமாள் கோயில் ஒன்றும் சிவஸ்தலம் ஒன்றும் உள்ளது. அவர் வணங்கி வழிபட்ட பசுபதீஸ்வரர் திருகோயில் மூலவர் பசுபதீஸ்வரர் தான் நீங்கள் படத்தில் காண்பது .

பாடகச்சேரி குடந்தை மன்னாரர்குடி சாலையில் வலங்கைமான் அருகில் உள்ளது.
பிரதான சாலையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில இத்திருக்கோயில்களும் ,ஸ்வாமிகள் மடமும் உள்ளது .







 






 

மங்காத புகழ் சேர்ப்பார் புகழ்பரணீஸ்வர பெருமான்-கண் கொடுத்த வணிதம் 


அன்பர்களே , திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி வட்டம், கமலாபுரம் செல்லும் வழியில் உள்ளது கண் கொடுத்த வணிதம்.

இங்குள்ள மிக புராதனமான திருகோயில் ஒன்றில் குடிகொண்டுள்ளார் நயன வரதேஸ்வர சுவாமி .

தன்னை நாடி வருபவர்களுக்கு மங்காத கண் ஒளி வழங்குகிறார் இவர்.

திருகோயில் மிக சிதிலமடைந்ததை  ஒட்டி, மெய்யன்பர்களால் திருகோயில் திருப்பணி செய்யப்பட்டு தற்போது ஆலயம் மிக சிறப்பாக தூய்மையாக விளங்கி வருகிறது.

இங்கு கோயில் கொண்டுள்ள புகழ் பரணீஸ்வர பெருமானை வணங்கி  விட்டு தான் போருக்கு செல்வார்கள் இப்பகுதியை ஆண்ட சோழ  மன்னர்கள் .

சோழ சாம்ராஜ்ஜியம் பெருமளவு விரிவு அடைந்ததற்கு, பெரும் புகழோடு விளங்கியதற்கும் இப்பெருமானின் அனுக்ரஹமே காரணம்.

நாமும் சென்று சேவிப்போம். புகழோடு வாழ்வோம் .



Saturday, September 12, 2015

பரிதாப நிலையில் பாகல்மேடு பரமன் திருகோயில் 


அன்பே சிவம். ஆவடி,திருநின்றவூரிலிருந்து பெரியபாளையம் செல்லும் வழியில் உள்ளது பாகல்மேடு என்னும் சிறிய கிராமம் .இங்கிருந்து இடதுபுறம் செல்லும் சாலையில் சிறிது தூரம் பயணித்தால், வயல்வெளி நடுவே இப்பெருமானை தரிசிக்கலாம்.

சென்னை வடபழனியை சேர்ந்த உழவார பணி மன்றத்தினர் மேற்கூரை ஒன்றை அமைத்துள்ளார்கள்.

பெருமானின் கம்பீர தோற்றம் மனதைவிட்டு அகலாது.

இப்பெருமானுக்கு திருகோயில் கட்டும் பணி ,கொடுப்பினை யாருக்கு வாய்த்திருக்கிறதோ தெரியவில்லை .

கனவில் தோன்றி கோயில் கட்ட சொன்ன இறைவன் --பதுவஞ்சேரி 


சென்னை மாடம்பக்கம் தேனுபுரீஸ்வரர் திருகோயிலில் சேவை செய்து வந்த முதியவர் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களது கனவில் சாது ஒருவரின் வடிவில் வந்து இறைவன் தன் இருப்பிடத்தை  உணர்த்திய தலம்  இது.

அப்போது லிங்கத்துமேடு  என்று அழைக்கப்பட அந்த இடத்தை கனவில் வந்த முதியவர் கூறியதின் பேரில், தோண்டியபோது கிடைத்த லிங்கதிருமேனிகள் பின்னர் காஞ்சி முனிவர் ஜெயேந்திரர் அருளாசியின்  படி  கிராம மக்களாலும்  அடியார் பெரு மக்களாலும் திருகோயில் அமைக்கப்பட்டு தற்போது மிக நேர்த்தியாக பராமரிக்கப்பட்டு வருகிறது .
எழில் கொஞ்சும் பசுமையான வயல் வெளிகளிடையே திருகோயில் அமைந்திருப்பது மனதிற்கு சாந்தத்தை தருகிறது.

தாம்பரத்தை அடுத்த  பதுவன்சேரி என்னும் இடத்தில் தான் கைலாசநாதர் அருளும் இத்தலம் அமைந்துள்ளது. கிழக்கு தாம்பரத்திலிருந்து  பேருந்து வசதி உள்ளது . அகரம் தென் என்னும் இடத்திற்கு அடுத்த பேருந்து நிறுத்தம் .

அன்பர்களே வாழ்வில் ஒரு முறையேனும் இப்பெருமானை தரிசிக்க வேண்டும் . கொடுத்து வைத்தவர்கள் தரிசிப்பார்கள் .


மன மகிழ்ச்சி கூட்டும் மாணிகேஸ்வரர்--தாதாபுரம்

ராஜ ராஜ சோழபுரம் என்பதே மருவி தற்போது தாதாபுரம் என அழைக்கப்படுகிறது .

ராஜ ராஜ சோழனின் தமைக்கையார் குந்தவை பிராட்டியார் தன தம்பியின் நினைவாக அதே கால கட்டத்தில் அதே கலை நயத்துடன் கட்டிய கோயில் ஒன்று கிராம மக்களால் இன்று பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது .

திண்டிவனம்-வந்தவாசி சாலையில் பேட்டை என்னும் இடத்தில் இறங்கி ஆட்டோ மூலம் இத்திருகோயிலை அடையலாம் .

இறைவன் திருப்பெயர் ரவிகுல மாணிகேஸ்வரர்.





Friday, September 11, 2015

பழுதடைந்திருந்தாலும் ஆலயம் தொழுவது சாலவும் நன்று 




அன்பர்களே , புதிதாக திருகோயில்களை நிர்மாணிப்பதை விட , இருக்கிற புராதனமான, நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் பாடப்பெற்ற, பல்வேறு காலக்கட்டங்களில் மகான்களாலும் சித்தர்களாலும் வழிபடப்பெற்ற, நம் மன்னர்களால் உருவாக்கப்பட்ட திருகோயில்களை பாதுகாத்து, வரும் நம் சந்தததியினருக்கு வழங்குவதே சால சிறந்தது.

மிகவும் சிதைத்துள்ள திருகோயில் ஒன்றில் ஸ்ரீ சிவபெருமான் , புத்தூர்  கிராமம் , ஓச்சேரி , சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை . காஞ்சிபுரம் மாவட்டம்.

ஓச்சேரியிலிருந்து இத்தலம் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இத்தலத்தில் மற்றொரு சிவாலயமும் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.

குபேரன் அருள்பெற செல்லுங்கள் சென்னிமங்கலம்--லால்குடி 



திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் சென்னிமங்கலம் கிராமத்தில் பேரளவினராய் , மரகத திருமேனியராய் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சுந்தரேச்வர பெருமானை , தல விருட்ஷமான வில்வமரத்தை வலம் வந்து வழிபட,
குபேரனின் அருட் கடாட்சம் கிட்டும்.

இதற்கு காரணம் , ஸ்ரீ சிவபெருமான் குபேரனுக்கு அருளிய பொன் வில்வசாரம் இவ்வாலயத்தில் பன் மடங்கு பல்கி பெருகி அற்புதம் அளித்ததே ஆகும்.

பௌர்ணமியன்று திருவண்ணாமலை அருணாச்சலேச்வரை வலம் வந்தபின்,
பக்தர்கள் இவ்வாலயம் வந்து  ஸ்ரீ சுந்தரேஸ்வரரை வழிபடுதல் மரபாக இருந்து வந்தது .

இறைவி மீனாக்ஷி கால்களில் பெருவிரலில் மெட்டி அணிந்துள்ளது சிறப்பாகும் 

பசுமை நிறைந்த வயல்கள் தோப்புகளுக்கு நடுவே ஆலயம் அமைந்துள்ளது.
மார்ச் கடைசி வாரம் முதல் ஏப்ரல் முதல் வாரம் வரை சுமார் சுமார் பதினைந்து  தினங்களுக்கு சூரியனின் கதிர்கள் நேராக இறைவன் மீது படும்போது கரும்பச்சை நிறத்தில் இறைவன் ஜொலிஜொலிப்பது கண் கொள்ளா காட்சியாகும் 

தற்போது இத்திருகோயில் திருப்பணி நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது

ஆலய அர்ச்சகர் திரு கணேச குருக்கள் ,
                                   கீழ வீதி , லால்குடி
                                     9786189093


Monday, September 7, 2015

பெரும் புகழோடு விளங்கிய பெரும்புகளூர் ---ஒரு காலத்தில்




அழிவின் பிடியில் அகஸ்தீஸ்வரர் ஆலயம்.

திருவாரூர் குடந்தை சாலையில் 2 km இல் இருக்கும் கிராமம் பெரும்புகளூர்.
இங்கு ஒருகாலத்தில் பெரும் புகழோடு இருந்த ஆலயம் அபிராமி அம்மை உடனாய அகஸ்தீஸ்வரர் ஆலயம்.

இன்றோ ஒரு சில செங்கற்களே எஞ்சியுள்ள நிலையில் இறை வடிவங்கள் ஒரு சிறிய அஸ்பெஸ்டாஸ் வேயப்பட்ட கூரையில் அருள்பாலிகின்றனர்.

சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பூசை அறவே நின்று போன இந்த ஆலயத்தில் அன்பர் மாரிமுத்து அவர்கள் தினமும் தற்போது 12 ஆண்டுகளாக ஒரு கால பூசை செய்து வருகிறார்.

கோயிலுகென்று ஏராளாமான நிலங்கள் இருந்தபோதிலும் அவைகள் எல்லாம் தற்போது ஆக்ரமிப்பின் 
பிடியில் சிக்கியுள்ளன.

அரசின் உதவி மற்றும் சிவனேய செல்வர்களின் வழிகாட்டுதலை எதிர்பார்த்து கிராம மக்கள் காத்திருக்கிறார்கள். 
contact: Mari Muthu :99431 30863

வாஸ்து குறைபாடுகள் நீங்க, விரைந்து வீடுகட்டிமுடிக்க செல்லுங்கள்  செவலூர் .


எங்கே உள்ளது இத்தலம்?

புதுகோட்டை மாவட்டம் , பொன்அமராவதி செல்லும் வழியில் உள்ள செவலூர் பூமிநாதர் திருகோயில் அனைத்து வாஸ்து குறைபாடுகளையும் 
நீக்கி அருளும் அற்புத தலமாக திகழ்கிறது.

வீடு கட்ட ஆரம்பித்து முடிக்க இயலாமல் பண பற்றாகுறையால் திகைப்பவர்கள் , இங்கு பூமினாதர் முன் ஒரு செங்கல்லை வைத்து வணங்கி 

உங்கள் மனையில் ஈசான்ய மூலையில் வைத்து கட்ட ஆரம்பித்தால், வீடு விரைந்து கட்டப்பெறும்.

மேலும் நிலங்கள்,பூமி சம்பந்தமான அனைத்து சச்சரவுகளுக்கும் இங்கே 

பிரார்த்தனை செய்யலாம். அவை உடன் நிவர்த்தி ஆகும்.

இது தவிர மேலும் மேலும் நிலங்கள் வாங்கவும் , பூமி சேர்க்கை ஏற்படவும் 

இங்கு வணங்கலாம்.



Saturday, September 5, 2015

பலன் தரும் பரிகார தலங்கள் 

போதை பழக்கத்திலிருந்து விடுபட இங்கே வாங்க 


அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பாம்புரம். திருவாரூர் மாவட்டம்.
ராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல் ஒரே சரீரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி அருள்பெற்ற தலம்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 122 வது தேவாரத்தலம் ஆகும்.
போதை பழக்கம் உள்ளவர்கள் ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 - 6 ராகு காலத்தில் இத்தல இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிப்பட்டால் தீய பழக்கங்களில் இருந்து விடுபடலாம். இவ்வாறு செய்து வந்தால் 264 வகையான பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.


ஆபத்துகளை களைவார் ஆபதாருண சுவாமி, 

அம்பல், நாகை 

அருள்மிகு காமாட்சி அம்மை உடனாய ஆபத்தாருண சுவாமி, அம்பல், நாகை மாவட்டம்.(சட்ட நாத சாமி கோயில் )
அன்பர்களே மிக வித்யாசமான பெயர் கொண்ட இந்த இறைவனை போல் வேறெங்கும் காண முடியுமா தெரியவில்லை.
தேவார பாடல் பெற்ற அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருகோயிலுக்கு மிக அருகிலேயே இத்தலம் உள்ளது. ஆனால் யாரும் அறிந்திருக்கவில்லை .
மிக அற்புதமான பரிகார தலம் இது. சட்டநாத பெருமான் தன் சூலாயுதத்தால் உருவாக்கிய தீர்த்தம் உள்ளது. அற்புதமான ஆற்றல் வாய்ந்த இந்த தீர்த்தம் கொடிய நோய்களையும் தீர்க்க வல்லது முக்கியமாக தொழு நோய்.
திருகோயில் மெய்காப்பாளர் திரு மோகன் அவர்கள் கோயில் அருகிலேயே உள்ளார். தரிசனம் செய்ய உதவுகிறார்.
அவர் மொபைல் எண் 9962184946
ஆனால் திருகோயில் மிகவும் சிதிலமடைந்த நிலையில், திருப்பணியை எதிர்நோக்கியுள்ளது.
இத்தகைய அரிய திருகோயில்களை நாம் இழந்துவிட கூடாது.
அன்பர்களே குறைந்த பட்ஷம் சென்று தரிசனமாவது செய்வோம் .




Friday, September 4, 2015

ஆடுகள் ஓய்வெடுக்கும் ஆடேரீச்வர பெருமான் --அஞ்சலாறு-குத்தாலம் -மயிலாடுதுறை 

ஆடேரீஸ்வர பெருமானின் எழில் தோற்றம், அஞ்சலாறு, குத்தாலம்
மயிலாடுதுறை வட்டம்.குத்தாலம் பந்தநல்லூர் பேருந்து வழித்தடத்தில் திருமணஞ்சேரி செல்ல பிரியும் வழியில் அஞ்சலாறு உள்ளது. இங்குள்ள அடர்ந்த புளியன் தோப்பிற்குள் இரு அற்புத சிவலிங்க திருமேனிகள் வழிபாடின்றி உள்ளது.
இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் தேவார பாடல் பெற்ற தலமான திருவேள்விக்குடி உள்ளது.
ஆடு என்ன அழகாக ஓய்வு எடுக்கிறது பாருங்கள்.
மனித சஞ்சாரம் தான் இல்லை
 





Thursday, September 3, 2015

கொங்கு நாட்டின் திருவண்ணாமலை--மரப்பாலம்---
மதுக்கரை --கோவை 

பஞ்ச பாண்டவர்களில் தருமர் வழிபட்ட தருமலிங்கேஸ்வரர் ஆலயம்.அற்புதமான இந்த சிவாலயம் கோவை-பாலக்காடு சாலையில் மதுக்கரை அருகில் ஒரு மலையின் மீது  அமைத்துள்ளது. ஒவ்வொரு பௌரமியன்றும் இங்கு ஏராளமான பக்தர்கள்  கிரிவலம் செய்கிறார்கள்.
அஷ்ட லிங்கங்கள் சந்நிதியும் உண்டு.
ஆலயத்தை அடைய 800 படிகளை கடந்து செல்ல வேண்டும்.
சிரமமான பயணம் தான். ஆனால் தினசரி சூரிய பூசை நடைபெறும் சிறப்பான சிவாலயம் இது.
இங்கு அம்பாளுக்கு சந்நதி இல்லை என்பது குறிப்பிட தக்கது. தடை செய்யப்பட வணபகுதி என்பதால் இங்கு இரவு 6.00 மணிக்கு மேல் தரிசனம் கிடையாது.
இயற்கை எழில் சூழ்ந்த இந்த சிவாலயத்தை வாழ்வில் அனைவரும் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும்.


பலன் தரும் பரிகார தலங்கள் 

கண் பார்வை குறைபாடுகளுக்கு திருகண்ணார்க்கோயில்---நாகை 

அருள்மிகு கண்ணாயிமுடையார் திருக்கோயில், குறுமாணக்குடி (திருக்கண்ணார் கோவில்)-609 117 கொண்டத்தூர் போஸ்ட், தரங்கம்பாடி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்.

கண் சம்பந்தப்பட்ட நோயுள்ளவர்கள் இங்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் சிறந்த பலன் உண்டு என்பது நம்பிக்கை.

இங்குள்ள அம்மன் சன்னதிக்கு மேல், 12 ராசிக்குரிய கட்டங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 12 ராசிக்காரர்களும் தங்கள் ஜாதகத்தில் தோஷம் ஏற்பட்டிருந்தால், அம்மன் முருகுவளர்க்கோதை நாயகிக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷம் விலகும் என்பது ஐதீகம். திருமணத்தில் தடை உள்ளவர்கள் வழிபடவேண்டிய சிறந்த தலம்.

Wednesday, September 2, 2015

கங்கைக்கு நிகரான தென்கங்கை--

சின்ன நரிமேடு- பண்ருட்டி 


அருள்மிகு பிரகன் நாயகி உடனுறை தென்கங்காபுரிஸ்வரர் திருக்கோயில்


 அருள்மிகு பிரகன் நாயகி உடனுறை தென்கங்காபுரிஸ்வரர் திருக்கோயில், சின்ன நரிமேடு, எடையார்குப்பம் பண்ருட்டி தாலுக்கா திருவஹீந்திரபுரம் அருகில், கடலூர்.
ஒரு காலத்தில் மிகப்பெரும் கோயிலாக இருந்திருக்கூடிய கோயில் இன்று ஒற்றை சன்னிதியுடன் பாழடைந்து கிடக்கிறது.
தென் கங்கை என நாவுக்கரசரால்போற்றப்பட்ட இப்பகுதியில் பாயும் கெடில நதியோ இன்று நீரின்றி வறண்டு முட்புதராக காட்சியளிக்கிறது .
கருவறைக்குள் மிக பிரம்மாண்டமான ஈசன். எளிய அலங்காரத்தில், அமர்ந்திருக்கும் கோலத்தில் உள்ளார்.
பவுர்ணமி தோறும் நிலவொளி மூலவரின் மீது படுவது சிறப்பு.
அருகேஉள்ளதிருவதிகையில் முப்புரம் எரித்த இறைவனார் இங்கு
கெடில நதியில் மூழ்கி தன வெப்பத்தை தனித்துகொண்டு, பூந்தோட்ட வனமாக திகழ்ந்த இத்தலத்தில், ஓய்வெடுத்ததாக தலபுராணம்.
சிவனார் குளித்தால் தலையில் சூடிய கங்கை கெடில நதியில் கலக்கிறது. கங்கைக்கு ஒப்பான தீர்த்தம் இது .
எனவே இத்தலத்து இறைவன உடலில் உள்ள வெப்பநோயை போக்கும் வைத்தீஸ்வரராகவும், மருந்தீஸ்வரராகவும் இருந்து அருள்புரிகிறார்.

திருவகீந்திரபுரம் செல்லும் மெயின்ரோட்டிலிருந்து பாலூர் முகப்பிலேயே தென்திசையில் நரிமேடு பேருந்து இறக்கத்தில் 50 மீட்டர் தொலைவில் திருக்கோயில் உள்ளது 

Tuesday, September 1, 2015

மன குழப்பம் போக்கும் மகேசன்----முதல் 

கட்டளை-----குடந்தை 


கும்பகோணம் வட்டம் , அருள்மிகு ஞானாம்பிகை உடனுறை மெய்ஞான மூர்த்தி திருகோயில் , முதல் கட்டளை கிராமம் .அன்பர்களே புராண வரலாறும் , வரலாற்று சிறப்பும் உடைய இத்திருகோயில், வியாச பகவானுக்கு, இறைவன் சிவனடியார் வேடத்தில் வந்து , அவர் அஞஞானத்தை அகற்றி மெய்ஞானத்தை, வேதத்தின் பொருளை உணர்த்திய இடம் இது..

அவர் இங்கு பலகாலம் தங்கி சிவலிங்க பிரதிஷ்டை செய்து வணங்கிய மூர்த்தியே , மெய்ஞானமூர்த்தி ஆவார் .

அச்சுதப்ப நாயக்கர் திருவிடைமருதூர் திருகோயிலுக்கு நிவந்தனமாக அளிக்கப்பட கிராமம் இது .
இது அருகில் உள்ள இலந்துரை திருகோவிலில் கல்வெட்டில் காணப்படுகிறது நாயக்கர்களுக்குப்பின் வந்த மராட்டிய மன்னர்களில் ஒருவரான துளஜா என்பவர் இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டு தன்
மனக்குழப்பம் நீங்கப்பெற்றார் .பல திருப்பணிகளையும் இவர் செய்துள்ளார். 

கல்வியில் பின்தங்கியவர்களும் , பெரும் மன குழப்பத்தில் சிக்கியவர்களும் இங்கு வந்து இறைவனை வழிபட்டு , பலன் பெறுகின்றனர்.

நாளைடைவில் பெரிதும் சிதைவுற்ற இத்தலம் இன்று அன்பர்களால் புனரமைக்கப்பட்டு வருகிறது.
எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடித்து , குடமுழுக்கு நடத்துவதற்கு தங்கள் மேலான ஆதரவு தேவைபடுகிறது .

திருப் பணிக்கு நன்கொடை அளிக்க விரும்பும் மெய்யன்பர்கள் கீழ்கண்ட அலைபேசி எங்களை தொடர்பு கொள்ளலாம்.


மெய்ஞான மூர்த்தி நற்பணி மன்றம் .

பி. கல்யாண சுந்தரம் (தலைவர்), முதல் கட்டளை எண் : 9489504915

ஆலய நிர்வாகி : ம. உப்பிலி , 9486406817, 9487031796