Saturday, March 30, 2019

நலிவடைந்த திருக்கோயில்களை  வழிபடலாமா?
வானமே கூரையாக தனித்து விடப்பட்ட திருமேனிகளை வழிபடலாமா?

அன்பர்களே ....இந்த சந்தேகம் இல்லாதவர்களே இல்லை .....

அன்பர்களே ...நீங்கள் நடந்து செல்லும் வழியில் ஒரு 2000  ருபாய் தாள் ஒன்றுஅனாமத்தாககிடக்கிறது என்றுவைத்துகொள்ளுங்கள்....அவ்வளவு வேண்டாம் ஒரு 500 ருபாய் நோட்டு ...ஒரு 10 ருபாய் ..அது ஒரு ரூபாயாகவே இருந்தாலும் , நம் மனம் எவ்வளவு அலைபாய்கிறது சுற்றிலும் இருப்பவர்கள் யாரவது பார்க்கிறார்களா என்று?

நம் மனதிற்கு தெரியும் அது மதிப்பு மிக்கது என்று ..அதை குப்பையில் கிடைப்பதால் வெறும் தாள் என்று ஒருவரும் ஒதுக்குவது இல்லை ..

ஆனால் ஏன் இறைவனின் மகிமையை மட்டும் சந்தேகிக்கிறோம் ? அவர் தனித்து விடப்பட்டால் ...அவரும் நம் மதிப்பிற்கும் , வழிபாட்டிற்கும் உரியவரே ......குப்பையில் கிடைப்பதால் வைரம் கரிக்கல்லாக மாறிவிடாது ..   

இது உண்மை என்று உங்கள் மனதிற்கு பட்டால் வாருங்கள் அத்தகைய 
திருமேனிகளை சரிசெய்து , விஷ்ணுபாகம் எனப்படும் ஆவுடையார் அமைத்து , நந்தியெம்பெருமானை பிரதிஷ்டை செய்து , குறைந்த பட்ஷம் மேற்கூரை இட்டு , அப்பெருமானை வழிபாட்டிற்கு கொண்டு வர ப்ரம்ம பிரயத்தனம் செய்கிறார்கள் இம்மன்றத்தினர் ......

அன்பர்களே ...இப்பெருமான்கள் ஒன்றும் திடீரெனெ முளைத்து விடவில்லை ..பல்லாண்டு காலங்களாக பல்வேறு ரிஷிகளாலும் , மகான்களாலும் ,முனிவர்களாலும் ,தேவார மூவர்களாலும் வழிபட பெற்று பேரரசர்களால் கட்டப்பட்ட திருக்கோயில்களில் குடிகொண்டு அருளாட்சி செய்து , பின்னர் காலமாற்றங்களினாலும்  , நம் அசிரத்தையினாலும் இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதே உண்மை  ..

நம் கடமை என்ன?

இத்தகைய அரிய செயலை செய்வோர்க்கு உதவிக்கரம் நீட்டுவது, பலருக்கும் தெரியப்படுத்துவது  நம் கடமை ...
இதனால் நாம் மட்டுமின்றி நம் சந்ததியினரும் பெரும் பலனை அடைவார்கள் ...சிவ திருப்பணிக்கென ஒரு செங்கல்லை வழங்கினாலே நம் குலம் தழைத்தோங்கும் ...வாழ்வாங்கு வாழும் ....

கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபை

அலைபேசி எண்கள் 9444 352848/ 9677226260

திரு ஜெயபாலன் அலைபேசி எண் 99410 45123
இந்த எண்களில் தொடர்பு கொண்டு உங்கள் ஆதரவை தெரிவிக்கலாம் ... மேற்கூரை அற்ற பெருமான்களுக்கு திருப்பணி செய்ய உங்கள் அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் தேவை ..... மதுராந்தகம் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள திருமேனிகள் உங்கள் பார்வைக்காக

விச்சூர் கிராமம் செங்கல்பட்டு ---காஞ்சிபுரம் அருகில் இவர்களது திருப்பணி .....

திருப்பணிக்கு முன்பிருந்த நிலை

முகநூல் பக்கம்

Friday, March 22, 2019

நீங்காத செல்வ வளம் பெருக , தம்பதியர் பிணக்குகள் நீங்கி ஒற்றுமையுடன் வாழ

வாருங்கள் நின்றவூர் லட்சுமி புரீஸ்வரரின் அருளை பெற்று வரலாம் .....

எங்குள்ளது ?  

திருவள்ளூர் மாவட்டம் சென்னை -திருவள்ளூர் பேருந்து மார்க்கத்தில் (ஆவடி வழி)திருநின்றவூர் உள்ளது .... 

108 திவ்ய ஷேத்திரத்தில் ஒன்றான, புகழ் பெற்ற  பக்த வத்சல பெருமாள் திருக்கோயில் இங்கு உள்ளது.
இதய நோய்கள் நீக்கும் பரிகார தலமான இருதயாலீஸ்வரர் திருக்கோயிலும் இங்கு தான் உள்ளது ..
பூசலார் நாயனார் பிறந்து வளர்ந்து இவரால் வழிபட பெற்ற கைலாசநாதர் திருக்கோயிலும் இவ்வூருக்கு புகழ் சேர்க்கிறது .(இத்திருக்கோயில் திருப்பணி தற்போது நடைபெற்று வருகிறது )

தல புராணம் 

சந்தர்ப்பவசத்தால் தன் கணவனான திருமாலை பிரிந்த மஹாலக்ஷ்மி , இத்தலத்தில் சிவபெருமானை நின்றபடியே தியானித்து , தவம்புரிந்து ,பின் அவர் அருளால் தன் பதியை அடைந்ததால் , இப்பெருமான் 
லட்சுமிபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் ..

திருவாகிய மகாலக்ஷ்மி நின்றபடி தவம் புரிந்த இடமாகையால் இத்தலம் திருநின்றவூர் ஆயிற்று .

இப்பெருமானை உள்ளன்போடு வழிபடுவதால் வறுமை அகலுவதோடு , பிரிந்திருந்த கணவன் மனைவியர் மீண்டும் வாழ்க்கையில் ஒன்றிணைவர் என்பது திண்ணம் ...

ஆனால் அன்பர்களே .....இப்பெருமான் இருப்பதே இப்பகுதி மக்கள் அறியாதது தான் சோகம் .
ஏனெனில் , இப்பெருமான் பக்தவத்சல பெருமாள் கோயில் அருகில் புதர் மண்டிய ஒரு இடத்தில் பல காலமாக பூசைகள் இன்றி இருந்தார்.  பின்னர் பக்தர்கள் முயற்சியின் பேரில் இக்கிராமத்தின் காவல் தெய்வமாக விளங்கும் கன்னிமார் கோயில் எனப்படும் கன்னியம்மன் கோயில் வளாகத்தில் மிகச்சிறிய ஒரு இடத்தில் தற்போது கோயில் கொண்டுள்ளார் ....

கன்னியம்மன் கோயில் பக்தவத்சல பெருமாள் கோயிலுக்கு மிக அருகில் எல்லம்மன் கோயில் எதிரில் ஒரு சிறிய சந்தில் உள்ளது ...

அன்பர்களே ...கையில் வெண்ணையை வைத்து கொண்டு நெய்க்கு அலைவார்கள் ...என்பார்கள் .அதுபோன்று நம்மிடையே உள்ள புராதன பெருமை மிக்க திருக்கோயில்களை நாம் அறியாமல் உதாசீனம் செய்கிறோம் ....எங்கெங்கோ அலைகிறோம் ....நேரத்தையும் பணத்தையும் விரயமாக்குகிறோம்...

இப்பெருமானை தொடர்ந்து திங்கட்கிழமைகளில் வில்வ இலைகளால் அர்ச்சிப்போருக்கு வறுமை அறவே நீங்கி செல்வ வளத்தோடு திகழ்வார்கள் என்பது உறுதி . எனவே பண பிரச்சனைகளால் அவதி உறுவோர் இப்பெருமானை வணங்கி வரலாம் .....

திருநின்றவூர் ரயில் நிலையத்திலிருந்து இத்திருக்கோயில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது .ஷேர் ஆட்டோ வசதி நிறைய உள்ளது .

திறந்திருக்கும் நேரம்: இரும்பு கம்பிகளின் இடைவெளியில் எப்போதும் காணலாம் .


இத்திருக்கோயில் புராண வரலாறுகளை பற்றி விரிவாக அறிய aadhav101.blogspot.com/  என்ற வலைத்தளத்தை நீங்கள் நாடலாம் .


Sunday, February 10, 2019

மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா !!!!!!
அதிசயம் , அபூர்வம் .....ஆனால் உண்மை .....

முற்றிலும் மங்கையர் முயற்சியால் கட்டப்பட்டு , பராமரிக்கப்பட்டு, பூசிக்கப்பட்டு வரும் திருக்கோயில் இது .
இங்கு அனைத்து பூசைகளும் பெண்களாலேயே செய்யப்படுகின்றன .

பெண்கள் எவ்வாறு கருவறையில் பூசை செய்யலாம் ?  ஆகம விதி ..அது ...இது ....என்று நீங்கள் யோசிக்க துவங்குமுன் வாருங்கள்....கீழ்க்காணும் பதிவு உங்களுக்காகத்தான் ...

இந்திரன் மற்றும் அக்னியால்  வழிபட பெற்ற 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுயம்பு லிங்கத்திருமேனி சுமார் 6 அடி உயர பாண லிங்கமாக இப்பகுதியில் முட்புதரில் பல ஆண்டுகளாக பூசை புனஸ்காரங்கள் இன்றி 
வானமே கூரையாக காணப்பட்டார் .....

ஒருவரும் கண்டு கொள்ளாத நிலையில் அருகில் வாழ்ந்து வந்த பெண்கள் சிலர் ஒன்று கூடினர் .ரூபாய் 5 ற்கும் 10 ற்கும் கையேந்தி , அனைவரிடமும் யாசித்து யாசித்து , மிகுந்த அவமானங்களுக்கிடையில் சற்றும் மனம் தளராமல் இறைபணி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு சிறுக சிறுக சேர்த்து இப்பெருமானுக்கு சிறிய திருக்கோயில் ஒன்றை அமைத்துள்ளனர் ..

கடும் மழை  காலத்திலும் நான்கு கம்புகளை நட்டு , சில  தென்னை ஓலைகளை கூரையாக  வேய்ந்து , தங்கள் கொட்டும் மழையில் நனைந்த படி இப்பெருமானை இவர்கள் பூசித்துள்ளனர்.

கொட்டும் மழையாக இருப்பினும் , கடும் பனி வெயில் காலங்களிலும் இவர்கள் இப்பெருமானை பூசிப்பதை மட்டும் விடவில்லை ..
இன்றும் இப்பெருமானை ஒரு நாளைக்கு ஒரு குடும்பம் என்ற சுழற்சி முறையில் 10 குடும்பங்கள் இறைவனை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பாவித்து கவனித்து வருகிறார்கள் .....
தினசரி செலவு ருபாய் 150 + ஒரு நைவேத்தியம் . இதன்படி பிரதோஷம் உள்ளிட்ட அனைத்து விசேஷங்களும் தவறாமல் நடைபெறுகிறது .  சிவராத்திரி அன்று 4 கால விசேஷ அபிஷேகங்களும் உண்டு .
இதன் செலவுகளும் அருகில் வாழும் இப்பெண்களின் குடும்பங்கள் தான் ஏற்றுக்கொள்கிறது .
பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இப்பெண்கள் உதாரணம் ...
பலமுறை ஆண் அர்ச்சகர்களை நியமித்தும் , அவர்கள் ஒருவரும் இங்கு நிலைத்து இருந்ததில்லையாம் .
மாதொரு பாகன் இப்பெண்களின் பூசையை மனமுவந்து ஏற்றுக்கொன்கிறான் போலும் !!! 

சரி ....!   எங்குள்ளது இத்திருக்கோயில் ?  நாம் என்ன செய்ய வேண்டும் ...

திருவள்ளூர் மாவட்டத்தின் தொழிற்பேட்டையான காக்களூர் திருகாரணீஸ்வரர் ( இத்திருக்கோயில் பிரதான சாலை ஓரத்திலேயே அமைந்துள்ளது ) திருக்கோயில் அருகிலேயே சற்றே உள்ளடங்கிய பகுதியில் 
சிவசக்தி விநாயகர் கோயில் அடுத்து இத்திருக்கோயில் உள்ளது .....எளிதில் விசாரித்து அடையலாம் ...

இத்திருக்கோயில் காலை 5.30 மணிக்கே திறக்கப்பட்டு இரவு 9.30 மணி வரையில் மூடப்படாது இருக்கும் .
ஆன்மீக அன்பர்களே ......பெறற்கரிய இத்திருக்கோயிலை பெண்கள் பெரும்பாடு பட்டு கட்டிய இத்திருக்கோயிலை வாழ்நாளில் ஒருமுறையேனும் சென்று தரிசியுங்கள் !!!!! 

இறைவன் திருப்பெயர் அக்னீஸ்வரர் ...அன்னை அபிராமி 

உங்களால் இயன்றதை பூசை பொருட்களாகவோ , பொருளாகவோ தந்து வளையல் கரங்களுக்கு வலு சேருங்கள் .....
இந்திரனுக்கும் கிடைக்காத மாபெரும் பேறு  பெற்ற இப்பெண்கள் வானுறையும் தெய்வத்துள் வைத்து போற்றப்படுவர் என்பது உறுதி 

Sunday, January 27, 2019

வேதங்கள் வழிபட்ட வேதநாயகன் 

சகல தோஷங்களையும் நீக்கும் பரசுராம ஷேத்திரம் 
பித்ரு கடன்களை நிறைவேற்ற உகந்த தலம் 
மஹாலக்ஷ்மி வழிபட்ட மகத்தான தலம் 
இரும்பு சம்பந்தப்பட்ட கனரக தொழில் முனைவோர் விரும்பி வழிபட வேண்டிய தலம் 
நாயன்மார்களில் ஒருவரான ஆனாய நாயனார் அவதரித்த  ,முக்தி பெற்ற தலம் 
ஜைமினி மகரிஷி சாம வேதத்தை 1000 சாகைகளாக பிரித்து அருளிய தலம் 
சந்தர்ப்பவசத்தால் ஏழ்மை நிலை அடைந்தவர்கள் மீண்டும் இழந்த செல்வத்தை அடைய வழிபட வேண்டிய தலம் .......

அன்பர்களே இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் இத்திருக்கோயிலின் பெருமையை ...

பரசுராமர் தன தாயை கொன்ற பாவம் நீங்கவும் , சண்டேசர் தன தந்தையை கொன்ற பாவம் போகவும் இங்கு வந்து சாம வேதீஸ்வரரை வழிபட்டுள்ளனர் ..

குபேரனும் இங்கு வழிபட்டுள்ளதாக தல புராணம் குறிப்பிடுகிறது ...

அன்பர்களே பெறற்கரிய இத்திருக்கோயிலை நீங்கள் உங்கள் வாழ்நாளில் ஒருநாளேனும் வணங்கி அருள்பெற வேண்டாமா..? 

வாருங்கள் திருமங்கலம் லோகநாயகி உடனுறை சாமவேதீஸ்வரர் திருக்கோயிலுக்கு ..திருச்சி மாவட்டம் , லால்குடி வட்டம் தேவார பாடல் பெற்ற மாந்துறை அருகில் உள்ளது திருமங்கலம் கிராமம் .

இத்திருக்கோயில் காலை 7 மணியிலிருந்து 11,30  மணி வரையிலும் மாலை 4.30 மணியிலிருந்து 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும் ...அலைபேசி எண்களும் தந்துள்ளேன் ..

லால்குடி யிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் இத்தலம் உள்ளது ..சுற்றிலும் ஏராளமான தலங்கள் சூழ நடுநாயகமாக ஒரு ஆன்மீக பொக்கிஷமாக இத்திருக்கோயில் விளங்குகிறது 

அன்பர்களே கருவறையில் ஒளிபொருந்திய கம்பீரமான திருமேனி கொண்டு விளங்கும் சாமவேதீஸ்வரரை தரிசித்த மாத்திரத்தில் நம் துன்பங்கள் பறந்தோடும்...

அபய ஹஸ்த குருபகவான் , வடக்கு நோக்கிய காக வாஹனம் உடைய சனிபகவான் இத்தலத்தின் மற்றுமோர் சிறப்பாகும் ...

பித்ரு தோஷம் உடையவர்கள் இத்திருக்கோயில் வந்து வணங்க அவர்கள் பித்ரு தோஷத்திலிருந்து முழுமையாக விடுபடுவர் என்பது ஆன்றோர்கள் வாக்கு .....

குருக்கள் :பாலசுப்பிரமணிய சிவா 
98654 22027

ஞானஸ்கந்த குருக்கள் 

0431--2541040 , 97100 64571

Saturday, January 19, 2019

அண்டியவர் துயர் தீர்க்கும் அச்சுதமங்கலம் திருக்கோயில்கள் 
(இழந்ததை மீண்டும் பெரும் பரிகார தலம் )

பஞ்ச பாண்டவர்கள் தனித்தனியே ஸ்தாபித்த ஐந்து திருக்கோயில்கள் 
அவற்றுள் மூன்று மட்டுமே இன்று காண கிடைக்கிறது 
அவையும் தற்போது எவ்வாறு உள்ளது ?
இத்திருக்கோயில்களின் பெருமை என்ன?
வாருங்கள் ....தெரிந்து கொள்வோம் பெறற்கரிய இத்திருக்கோயில்களின் நிலை பற்றி ...

 புகழ்பெற்ற ஸ்ரீ வாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே , 2 கிலோமீட்டர்  தூரத்தில் குடந்தை நன்னிலம் சாலையில் உள்ளது அச்சுதமங்கலம் எனும் ஊர் ...

பஞ்ச பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தின் போது இத்தலத்தில் தங்கி இங்கு ஐவரும் சிவலிங்கம் அமைத்து வழிபட்டனர் என்பது வரலாறாகும் ..
பின்னர் ஆட்சி செய்த சோழ மன்னர்களால் பிரம்மாண்டமாக திருக்கோயில்கள் அமைக்கப்பட்டன  எனினும் அர்ச்சுனனை பிரதானமாக கொண்டு இவ்வூரை அர்ச்சுனன்மங்கலம் என்று அழைக்கப்பட்டது .
இன்று அச்சுதமங்கலம் என்று வழக்கில் உள்ளது .

மற்ற இரு திருக்கோயில்கள் காலப்போக்கில் முற்றிலும் அழிவுற்றதால், இக் கிராமத்தி  வெவ்வேறு இடத்தில்கிடைக்கப்பெற்ற இரு லிங்கத்திருமேனிகள் சகாதேவனாலும் , நகுலனா லும் வழிபட பெற்றவை என நம்பப்படுகிறது ..


இவை சோமநாதர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது .

அச்சுதமங்கலம் கோயில்கள் 1.சோமநாதர் ஆலயம் 

அளவிலும் பரப்பிலும் பெரிய கோயில் இது .பெரிய கோயில் என்றே அழைக்கிறார்கள்.
மூற்றாம் குலோத்துங்கன் கட்டிய கோயில். மூலவர் சோமநாதர் . அம்பாள்:சௌந்தர்ய நாயகி.

வீணை ஏந்திய தட்சிணாமூர்த்தி, கஜ சம்ஹார மூர்த்தி சிற்பங்கள் எங்கும் காண முடியாதவை.

ஆனால்அழிவின் பிடியில் இருந்து இந்த கோவிலும் தப்பவில்லை 

பக்தர்கள் வருகை குறைவு, வருமானம் இன்மையால் அரசின் பார்வை இன்னமும் அச்சுதமங்கலம்கோயில்கள் மீது படவில்லை.
அன்பர்களே ஸ்ரீவாஞ்சியம் செல்பவர்கள் அச்சுதமங்கலம் சென்று இக்கோயில்களையும் தரிசனம் செய்துவாருங்கள்.

அச்சுதமங்கலம் கோயில்கள் 2.

தர்மேஸ்வரர் திருக்கோயில் 

அம்பாள் : தர்மேச்வரி 


அன்பர்களே திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் அச்சுதமங்கலம் கிராமம், யம பயம் நீக்கும் பரிகார தலமான ஸ்ரீ வாஞ்சியத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள ஒரு புண்ணிய ஷேத்திரமாகும்.

பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட பெருமையை உடையது. 3 சிவஸ்தலங்களையும் 1 பெருமாள் கோயில் உட்படபல திருகோயில்களை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது.

அவற்றில் ஒன்று தருமர் வழிபட்ட தர்மேஸ்வரர் கோயில். மிகவும் சிதிலமைந்து உள்ளே செல்லவும் அச்சமாக உள்ளது, எங்கே இடிந்து விழுந்து விடுமோ என்று.


அம்பாளின் திருவுருவம் இன்றெல்லாம் காணலாம். அவ்வளவு அழகுஅச்சுதமங்கலம் கோயில்கள் 3.


காசி விஸ்வநாதர் கோயில்
இத்திருக்கோயில் புனருத்தாரணம் செய்யப்பட்டு பொலிவுடன் விளங்குகிறது .
பெரிய கோவில்  அருகிலேயே இத்திருக்கோயில் உள்ளது .
விசாரித்து எளிதில் அடையலாம் ..

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் அச்சுதமங்கலத்தில் எழுந்தருளியிருக்கும் காசி விஸ்வநாதரை வழிபட, வாழ்வில் இழந்ததை மீண்டும் பெறுவார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

காண்டக்ட்: R .மோகன் 9524348725
 —

அன்பர்களே பொருளை இழந்துவிட்டால் மீண்டும் பெற்று விடலாம் ..
பெறற்கரிய இத்திருக்கோயில்களை இழந்து விட்டால் ?
மீண்டும் பெற இயலாது ....
எனவே சென்று தரிசனம் செய்யுங்கள்.

இயன்றதை செய்யுங்கள் இல்லாத திருக்கோயில்களுக்கு ...

Thursday, November 22, 2018

திகிலூட்டும் அடர்ந்த முந்திரி காடு .......
ஆங்காங்கே சிதறி கிடக்கும் நூற்றுக்கணக்கான லிங்க மூர்த்தங்கள் ....
கண்ணுக்கெட்டும் தூரம் வரை மனித சஞ்சாரம் கிடையாது ...
சற்றே அமானுஷ்யத்துடன் கூடிய ஒரு ஆன்மீக பயணத்திற்கு நீங்கள் தயாரா?

அன்பர்களே.....!

வாருங்கள் .....புறப்படுங்கள் ஒரு குழுவாக.....விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பாண்டிச்சேரி அருகில் உள்ள பூத்துறை கிராமத்திற்கு .(மணவெளி என்றும் சிலர் கூறுகின்றனர் )

எங்குள்ளது....?

திண்டிவனம் --பாண்டி சாலையில் புகழ் பெற்ற பஞ்சவடி ஆஞ்சநேயர் திருக்கோயில் அடுத்து வரும் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு(பூத்துறை) நிறுத்தத்தில் இறங்கி ஆட்டோ மூலம் முந்திரி காட்டினுள் அமைந்துள்ள இத்தலத்தை அடையலாம் ..

ஆட்டோ ஓட்டுனர்கள் மிகவும் உதவியாக உள்ளனர்....சோலையப்பன் என்பவரது அலைபேசி எண் தந்துள்ளேன் 

சொந்த வாகனங்களில் செல்பவராக இருந்தால் பூத்துறை கிராமம்  ஹாரிசான் பேக்ஸ் என்கிற தனியார் நிறுவனம் அடுத்து வரும் தெருவின் வழியே சென்று அங்குள்ள ஒரு அம்மன் கோயில் தாண்டியவுடன் வலதுபுறம் வரும் சற்றே  உள்ளடங்கிய ஒரு முந்திரி காட்டினுள் சென்று நூற்றுக்கும் மேற்பட்ட பெருமான்களை நீங்கள்  வணங்கி மகிழலாம் ....பூஜை பொருட்களை கண்டிப்பாக கூட்டு ரோட்டில் வாங்கி கையில் வைத்திருக்க வேண்டும் ..

இப்பகுதியில் வசிக்கும் மக்களே இத்தலத்தை பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை ....

நூற்றுக்கணக்கான இந்த லிங்க திருமேனிகள் இங்கு வந்தது எப்படி? யார் பிரதிஷ்டை செய்தனர் ...தல வரலாறு ..? என எதையும் அறிய முடியவில்லை ...இத்திருக்கோயிலில் 63 நாயன்மார்களும் லிங்க திருமேனியராகவே காட்சியளிக்கின்றனர் ....அம்மனும் லிங்க உருவில் தான் அருள்கிறாள் ...

அருகே, செல்லும் வழியில் உள்ள திருச்சிற்றம்பலம் கைலாயநாதர் திருக்கோயில் திருப்பணி செய்யப்பட்டு பொலிவுடன் திகழ்கிறது ...தரிசனம் செய்ய மறவாதீர்கள் ...

அதேபோன்று கிடைத்தற்கரிய இத்தலத்தையும் பக்தர்கள் வழிபட ஏதுவாக புனரமைக்கப்பட வேண்டும் ..

பெயர்ப்பலகை இல்லாதமையால் முதற்முறை வருபவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் .இக்குறையையும் நீக்கவேண்டும் ....

அருகே தேவார பாடல் பெற்ற திருக்கோயில்கள் நிறைய உள்ளன .....
கிளியனூர் , ஒழித்தியாப்பட்டு ,இரும்பை மாகாளம் போன்றவை அவற்றுள் சில ...

அன்பர்களே .....

இத்திருத்தலத்தை வெளிச்சத்திற்கு , வெளிஉலகிற்கு கொண்டு வரும் பொறுப்பு நம் கையில் தான் உள்ளது....

நீங்கள்சென்றுதரிசித்து மறவாமல் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள் 

ஆட்டோ ஓட்டுநர் 
திரு சோலையப்பன் 9597660851Wednesday, November 14, 2018

நாடி செல்லுங்கள் நலிவடைந்த திருக்கோயில்களை .......
அன்பர்களே .....ஏன் ? என்ன காரணம்?

 நீங்கள் தேடி சென்று மணிக்கணக்கில் வரிசையில் நின்று , உண்டியலில் செலுத்தும் பணம் அந்த திருக்கோயில் வளர்ச்சிக்கோ , அங்கு பணிபுரியும் அர்ச்சகர்கள் வறுமையை போக்கவோ 

பயன் படுத்தப்படுவதில்லை ....மாறாக அவை கோடியில் புரள்பவர்களின் கைகளுக்கு தான்  செல்கிறது.

இறைவனுக்கு மாற்று வஸ்திரம் கூட இல்லாத திருக்கோயில்கள்      இங்கு பல உள்ளன .


 மின்சார கட்டணம் செலுத்த இயலாத இருளில் மூழ்கி கிடைக்கும் திருக்கோயில்கள் பல .


 திருப்பணி நிறைவேற்றப்படாததால் அழிவின் பிடியில் சிக்கியிருக்கும் திருக்கோயில்களோ  பலப்பல .


 ஏழை அர்ச்சகர்களுக்கு மாத வருமானமாக ரூ 150/- கூட வழங்க வக்கில்லாத பல ஆண்டுகள் நிலுவையில் வைத்திருப்பவர்களுக்கா உங்கள் உண்டியல் பணம்?


பக்தர்கள் வருகையின்மையால் பெரும்பாலும் பூட்டியே கிடைக்கும் பாடல் பெற்ற   பல திருத்தலங்கள் காப்பாற்றப்படுவதற்கு ஏன் உங்கள் உழைப்பு பயன்படக்கூடாது ?


வாருங்கள் ....அப்படி ஒரு பாடல் பெற்ற திருத்தலத்தின் நிலையை காணலாம் ...


திருப்பெரும்புலியூர் .....

அன்றலர்ந்த பூக்களை பறிக்க வசதியாக புலிக்கால் கேட்டு பல ஆண்டுகள் தவமிருந்து பெற்ற புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்படும் வியாக்ர பாதர் , ஆதிசேஷனின் அவதாரமான 
பதஞ்சலி முனிவர் மற்றும் தேவாதி தேவர்கள் பலராலும்,மூவராலும்  வணங்கி வழிபட பெற்ற திருத்தலம் இது ...

இங்கு அமைந்துள்ள சௌந்தர்யநாயகி சமேத வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் மேற்கூறிய அவலங்களுக்கு முற்றிலும் பொருந்தும்.   


அன்பர்களே .....இத்தலத்தின் பெருமையை ஆயிரம் நா கொண்ட ஆதிசேஷனாலும் விவரிக்க முடியாது ..


இன்றைய காலகட்டத்தில் நாம் அனுபவிக்கும் அனைத்து துன்பங்களுக்கும் இத்திருக்கோயில் சிறந்த பரிகாரமாகும் ....கருவறையில் ஒளி பொருந்திய திருமேனியராய் கருணையே உருவானவராய் வீற்றிருக்கும் இறைவனை காணும்போது நம் துன்பங்கள் விலகி ஓடிவிட்டதை நம் அனுபவத்தில் உணரலாம் 
பக்தர்கள் வருகையின்மையால்  , குன்றிலிட்ட விளக்கு போல் பிரகாசிக்க வேண்டிய இத்திருக்கோயில் குடத்திலிட்ட விளக்கு போல் சோபையின்றி வருமானமின்றி வெறிச்சோடி இருக்கிறது ....

அருகில் உள்ளவர் திருக்கோயிலை திறந்து காட்டி தரிசனம் செய்ய உதவுகிறார்கள் ....


இருப்பிடம் :  இத்திருக்கோயில் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகில் உள்ள திருநெய்த்தானம் எனப்படும் தேவார பாடல் பெற்ற தலத்திற்கு அருகில் திருக்காட்டுப்பள்ளி செல்லும் பாதையில் அமைந்துள்ளது ...


நாம் செய்ய வேண்டியது என்ன?


அன்பர்களே மாதம் ஒருமுறையாவது இத்தகைய பெறற்கரிய திருக்கோயில்களை குடும்பத்துடன் சென்று வழிபடுங்கள்....


நம் குழந்தைகளுக்கு, இளைய தலைமுறையினருக்கு புராண வரலாறுகளை அவர்கள் அறியுமாறு எடுத்து கூறுங்கள் ...


நீங்கள் சென்று வருவதோடு நின்று விடாமல் பலரும் அறிந்து கொள்ளுமாறு அதனை பகிர்ந்து கொள்ளுங்கள் ....


தற்போது தான் முகநூல் , whatsapp என்று ஏராளமாக இருக்கின்றனவே .....அவற்றை உபயோகமாக நாம் பயன்படுத்துவோம் . பழத்திருக்கோயில்களை போற்றுவோம் ..பராமரிப்போம் ..
Friday, October 26, 2018

சிவன் கோவிலா? இங்கா? இல்லவே இல்லையே......!

அரிச்சந்திரபுரம் .....! ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில். அன்னை ஸ்ரீ சௌந்தர்யவல்லி .குடந்தையிலிருந்து பட்டீஸ்வரம் செல்லும் சாலையில் சோழன்மாளிகை என்ற இடத்திற்கு முன்னதாவே வரும் ...தேவார வைப்பு தலங்கள் வரிசையில் வரும் தலங்களுள் இதுவும் ஒன்று.  (அப்பரின் திருவீழிமிழலை திருக்கோயில் பதிகத்தில் வருகிறது)

ஆனால் அந்தோ பரிதாபம் ..! இத்தலத்தின் பெயரை சொல்லி கேட்டாலும் , சிவன் கோயில் என்று கேட்டாலும் இறைவன் திருப்பெயரான ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில் என்று கேட்டாலும் ,அப்படி ஒரு 
திருக்கோயில் இங்கு இல்லவே இல்லை என்று சாதிக்கிறார்கள் அருகில் உள்ள மக்கள் ...

அன்பர்களே .....இது எவ்வளவு  அவல நிலை ? அருகில் உள்ள இறைவனை ஆராதியுங்கள் ! குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் தானே குடியிருப்பார்கள் ?

திருக்கோயில் ,திருப்பணி செம்மல் ஸ்ரீமதி மஹாலக்ஷ்மி சுப்ரமண்யம் அவர்கள் ஆசியோடு ஆன்மீக அன்பர்கள் பலரது பெருமுயற்சியால் திருப்பணி நிறைவேற்றப்பட்டு  தூய்மையுடன் அழகான சூழலில் அமைதியாக விளங்குகிறது ...

முன்னர், இத்திருக்கோயிலின் சிலைகள் முழுதுமாக திருடப்பட்டு பராமரிப்பின்றி இறைவன் மட்டுமே தனித்து விடப்பட்டார். பல்லாண்டுகளுக்குப்பிறகு தற்போது திருப்பணி நிறைவேற்றப்பட்டாலும் திருக்கோயில் பெரும்பாலும் மூடியே உள்ளது பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ காலங்கள் நீங்கலாக ...

அன்பர்களே ...குறைந்தபட்ஷம் தேவார பாடல் பெற்ற தலங்களையாவது பகல் 12 மணி வரை திறந்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ....இல்லையேல் அரும்பாடு பட்டு திருப்பணி செய்த பலன் கிடைக்காமல் போய்விடும் ....

நாங்கள் சென்ற போதும் திருக்கோயில் பூட்டியே இருந்தது ...பட்டீஸ்வரத்தில் உள்ள குருக்கள் வீடு சென்று அழைத்தோம் ..கனிவுடன் வந்து எங்களுக்கு தரிசனம் செய்ய உதவினார் .....அவருக்கு மிக்க நன்றி ..

பெயர் பலகை ஒன்று அவசியம் வைக்கப்பட வேண்டும் .

கருவறையில் கருணையே வடிவாக குடியிருக்கும் இறைவனை காணும்போது நம் மனதில் ஏற்படும் உணர்ச்சிகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை .....

அன்பர்களே .....அனைவரும் சென்று தரிசியுங்கள் 
பக்தர்கள் வருகையின்மையால் தான் பெரும்பாலான திருக்கோயில்கள் பூட்டியே உள்ளன ...ஜன சந்தடி மிகுந்த நகரத்தில் உள்ள திருக்கோயில்களை மட்டுமே தரிசிப்பதை சற்று குறைத்து கிராமங்களில் உள்ள இத்தகைய திருக்கோயில்களையும் தரிசனம் செய்யுங்கள் ..

இவ்விடங்களில்  மட்டுமே இறைவன் விஸ்ராந்தியாக ,நம் குறைகளை களைவதற்கு ஏதுவாக வீற்றிருக்கிறார் .

Tuesday, October 23, 2018

நின் கடன் அடியேனையும் தாங்குதல்.....
என் கடன் பணி  செய்து கிடப்பதே .......

என்னும் வாக்கிற்கு இணங்க அரன் திருப்பணிக்கு தங்கள் நேரத்தை,வாழ்க்கையை  அர்ப்பணித்தவரா நீங்கள்?

அப்படியெனில்

ஆனைக்கோயில் அரனுக்கு ஆவுடையார் அமைத்து தரவிருக்கும் அதிருஷ்டசாலிகளில் நீங்களும் ஒருவராக இருக்கலாம் ....

அரன் அருளை பெற ஏற்ற தருணம் இதுவே ......
எங்குள்ளது ......? 
திருக்கோயில்கள் நிறைந்த காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு காஞ்சிபுரம் சாலையில் உள்ள ஆத்தூர் (இது சப்த சிவ ஷேத்திரமாகும்) என்னும் இடத்திலிருந்து பாலாற்றங்ககரை பாலம் தாண்டியவுடன் வரும் கிராமம் திருஆனைக்கோவில் ..

இங்கு வானமே கூரையாக பல ஆண்டுகளாக பாண வடிவில் கோயில் கொண்டருளும் இப்பெருமானை ஆவுடையார் அமைத்து முறைப்படி பிரதிஷ்டை செய்து வழிபாட்டிற்கு கொண்டு வர ,அன்பர்கள் பெரும் முயற்சி செய்து வருகிறார்கள் ....

விரைவில் மேற்கூரையும் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது ..

இப்பெருமான் நம் திருமயிலை கபாலீஸ்வரரை ஒத்த ஆகிருதியான (பருத்த) வடிவினராக விளங்குகிறார் ..இவருக்கு தகுந்த ஆவுடையார் செய்வதற்கு 27,000 ருபாய் நிதி உதவி தேவைப்படுகிறது ..
பக்தர்கள் அளிக்கும் நிதி உதவியை கொண்டே இத்திருப்பணி நிறைவேற்றப்பட வேண்டும் .
இப்பணியினை ஏற்றிருக்கும் ஸ்தபதி திரு அழகேசன் (7200905022) அவர்களை நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் .....
அல்லது அடியார் திரு பாலா 9941045123....
அல்லது கோட்செங்கட்சோழன் சிவ சபை திருப்பணி மன்றத்தின் நிறுவனரான திரு சிவ.த. வெங்கடேசன் 94443528848/9677226260 என்ற அலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு உங்கள் உதவியை நல்கலாம் .
விரைவில் திருக்கோயில் கட்டப்பட்டு அன்னாபிஷேகமும் இவர் காண வேண்டும் என்பதே இறைஅன்பர்களின் 
தீவிர விருப்பம் ஆகும்.
Wednesday, September 26, 2018

அன்று ....! மிக பிரம்மாண்டமான திருக்கோயில் !
இன்று.....! ஆசியாவின் மிக பெரிய கல்லறை !

ஆம்! அன்பர்களே ! எங்கே இந்த அவல நிலை? என்று தானே கேட்கிறீர்கள் ?

நம் சிங்கார சென்னையிலே தான் !

இப்படி ஒரு திருக்கோயில் இருப்பதே நம் சென்னை வாசிகள் 99% பேருக்கு தெரியாது ..மாற்று மதத்தவரின் பூத உடல்களுக்கு இங்கே அடைக்கலம் அளித்து விட்டு அடைக்கல நாதேஸ்வரர் என்ற மிக பொருத்தமான பெயருடன் இக்கல்லறையின் எதிரே அமைந்துள்ள தர்மராஜா திரௌபதி அம்மன் திருக்கோயிலின் உள் ஒரு சிறிய இடத்தில் அமர்ந்து, அபயம் என்று தன்னை நாடி வருபவர்களுக்கு அடைக்கலம் தந்து அருள்கிறார் அழகாம்பிகை சமேத ஸ்ரீ அடைக்கல நாதேஸ்வரர் ....

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த கீழ்ப்பாக்கம் தோட்டம் சாலையில் மிகப்பெரிய கல்லறை தோட்டத்திற்கு நேர் எதிரே இத்திருக்கோயில் அமைந்துள்ளது ...

ஏன் இந்த நிலை ஏற்பட்டது?

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் காலத்திலேயே , இரண்டு மிக பெரிய பிரகாரங்கள் , ராஜகோபுரம் என குடியிருந்த இப்பெருமானின் திருக்கோயில் கவனிப்பாரின்றி சிதிலமடைய துவங்கியிருந்தது ... 
மிகப்பெரிய கல்லறை தோட்டம் அமைக்க இடம் தேவைப்பட்ட அந்த நேரத்தில் சிதிலமடைந்த இத்திருக்கோயில் அவர்கள் கண்ணை உறுத்தவே , வந்தது இப்பெருமானுக்கு சோதனை !!!!!

அரன் திருக்கோயில் இடிக்கப்பட்டது . மிகப்பெரிய கல்லறை தோட்டம் கட்டப்பட்டது ....

இதுவே இவரின் வரலாறு ....பின்னர் ஆன்மீக அன்பர்கள் பலரது முயற்சியால் எதிரே உள்ள தர்மராஜா கோவிலில் இவருக்கு ஒரு சிறிய தனி கோயில் அமைக்கப்பட்டது ..

அன்பர்களே இன்று கருவறையில் ஒளி பொருந்திய கம்பீரமான திருமேனியராய் திகழும் இவரை தரிசித்த மாத்திரத்திலேயே நம் துன்பங்கள் பறந்தோடி விட்ட உணர்வு மேலிடுகிறது .....

இத்திருக்கோயில் நவகிரகங்கள் தத்தம் மனைவியரை மடியில் அமர்த்தி அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கின்றனர் .

யான் பெற்ற இன்பம் நீங்களும் பெற வேண்டுமல்லவா? சென்று தரிசியுங்கள் ! இப்பெருமானின் அருளை நீங்களே உணர்வீர்கள் !!

குறிப்பு: இப்பெருமானை இரும்பு கதவின் இடைவெளியில் எப்போதும் காணலாம்