Monday, March 29, 2021


அல்லல் என் செய்யும்? அருவினை என் செய்யும்? அகரம் மகாதேவர் அருள் இருக்கையில் ...!

அன்பர்களே ....! பிறவி பெரும்பயன் உள்ளவர்களே இத்திருத்தலத்தை  தரிசிக்க இயலும் ...நீங்கள் அனைவரும் இப்பயனை பெறவேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு.....

திருவள்ளூர் மாவட்டம் திருக்கோயில் உடைத்து என்றால் அது மிகையில்லை .அதிகமான கிராமங்களையும் அங்கெல்லாம் மிக புராதமான திருக்கோயில்களையும் கொண்டுள்ளது திருவள்ளூர் மாவட்டம் .

விவசாயம் பிரதான தொழில் என்பதால் , எங்கெங்கு காணினும் விவசாய நிலங்களும் தூய்மையான காற்றும் மனதுக்கு அமைதி தரும் சூழலில் அத்தகைய திருக்கோயில்கள்  அமைந்திருக்கும் ...

அப்படிப்பட்ட ஒரு திருக்கோயிலை தான் உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன் ....

1400 ஆண்டுகள் பழமையான மனோன்மணி அம்பிகை சமேத மகாதேவர் திருக்கோயில் அகரம் கிராமம் .திருவள்ளூர் மாவட்டம் , கடம்பத்தூர் ஒன்றியம் ....கடம்பத்தூரிலிருந்து பேரம்பாக்கம் செல்லும் வழியில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அகரம் கிராமம் .

திருவள்ளூர் மாவட்ட திருக்கோயில்களிலேயே மிகப்பெரிய லிங்கத்திருமேனி இத்திருக்கோயிலில் தான் உள்ளது ...

இப்பெருமானை பற்றிய புராண வரலாறுகளோ , செவி வழி செய்திகளோ இதுவரை அறியப்படவில்லை ...
சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக, விவசாய நிலமாக இருந்த இப்பகுதியில் , சற்றே மேடான ஒரு பகுதியிலிருந்து சிறிது சிறிதாக வெளியேற திருவுளம் கொண்டார் இப்பெருமான் ...

தோண்டி பார்த்தபோது மிகப்பெரிய பாண லிங்க வடிவில் எழுந்தருளினார் ..

பன்னெடுங்காலமாக தன் இரு பிள்ளை (யார்கள்)களுடன்  வெட்ட வெளியில் அருள்பாலித்து வந்த இப்பெருமானுக்கு அரும்பாடுபட்டு அருமையான திருக்கோயில் ஒன்றை அன்பர்கள் அமைத்துள்ளனர் ..

அன்னை மிகவும் பின்னப்பட்டு விட்டதால் புதிதாக நிறுவியுள்ளார்கள் ....

இன்றெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் ..அவ்வளவு அழகு மனோன்மணி அம்மை .நந்தியெம்பெருமான் அழகையும் அவசியம் கூற வேண்டும் .பெரிய திருமேனி .

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் உள்ளார் அகரம் மகாதேவர் ....மிகப்பெரிய நாகாபரணத்துடன் பிரம்மாண்டமாக கருவறையில் வீற்றிருக்கும் இப்பெருமானை விட்டு கண்கள் அகல மறுக்கிறது ..மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் எழில் மிகுந்த பருத்த திருமேனி ....

இவரை தரிசிக்கும் மாத்திரத்திலேயே நம் துன்பங்கள் யாவும் நம்மை விட்டு நீங்கும் உணர்வு மேலிடுகிறது .இவர் நமக்காகவே வந்தவர் .....மண்ணை பிளந்து கொண்டு வந்தவர் ....நம் துயர் துடைக்க வந்தவர்....

இவரை பாராமல் நாம் வாளாவிருக்கலாமா ?  
அகரம் மகா தேவரின் திருவடிகளை பற்றிக்கொள்ளுங்கள் ..
கொரானாவும் தலை தெறித்து ஓடும் ..

திரளாக வாருங்கள் அன்பர்களே........

பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ காலங்களில் எளிதாக தரிசிக்கலாம் இவரை .
மற்ற நாட்களில் அவசியம் கீழ்கண்ட அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தரிசிக்கலாம் ..
எண்கள் தந்துள்ளேன் ஏமாற்றத்தை தவிர்க்க ..

பக்தர்கள் வருகை குறைவான கிராம பகுதி என்பதால், அவர்களால் நாள் முழுதும் திருக்கோயிலை திறந்து வைத்துக்கொண்டிருக்க முடியாது என்ற நிதர்சனத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?

அலைபேசி எண்கள் :
9159055306
9894936427



முன்பிருந்த நிலை 



No comments:

Post a Comment