Monday, August 31, 2015

பழியஞ்சிய நல்லூர் பெருமான் 

கும்பகோணம்--காரைக்கால் பேருந்து பாதையில் வரும் சிற்றூர் பழியஞ்சியநல்லூர்(குட்டகரை).தேவார பாடல் பெற்ற தலமான வைகல் மாட கோயில் செல்லும் வழியில் இத்தலம் உள்ளது.
இங்கு பலகாலமாக சிதிலமடைந்திருந்த இத்திருகோயிலை புனரமைக்க அன்பர்கள் பெருமுயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.


கருவறையில் பெருமான் அற்புத அழகோடு கம்பீரமாக வீற்றிருக்கும் காட்சி கண்ணை விட்டு அகலாது.

அன்பர்களே தவற விடாதீர்கள்.
தெரியுமா உங்களுக்கு?


பெற்ற தாய்க்கு ஓர் கோயில் இருப்பது உலகிலேயே நம் தமிழகத்தில் மட்டும் தான்! ஷாஜஹான் தன் மனைவிக்கென கட்டிய தாஜ்மஹாலை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம். அனால் அதற்கு பல ஆண்டுகள் முன்னரே தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் மனைவியும், தன்னை தாய்க்கு தாயாக வளர்த்த தன சிற்றன்னையுமான பஞ்சவன் மாதேவியின் நினைவாக முதலாம் ராஜேந்திர சோழன், நம் தமிழன்,கட்டிய கோயில் ஒன்று கேட்பாரற்று கிடக்கிறது!

இது தமிழர்களாகிய நமக்கு பெருமை சேர்க்ககூடியது அல்ல.

அதுவும் கோயில் நகரமாம் குடந்தை நகரின் மையப்பகுதியில் பட்டீஸ்வரம் அருகில் சோழன் மாளிகை எனப்படும் இடத்தில் தான் இந்த பள்ளிப்படை ஆலயம் உள்ளது.இங்கு தான் ராஜராஜ சோழன் தன வாழ்நாளில்
கடைசி நாட்களை கழித்ததாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.தற்போது இந்த ஆலயத்தை ராமசாமி கோயில் என்று குறிப்பிடுகிறார்கள்.


பலன் தரும் பரிகார தலங்கள்: திருவேதிகுடி

முதலில் திருமண தடை நீக்கும் ஒரு திருத்தலத்தை பார்ப்போம்

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேதிகுடி-613 
202.கண்டியூர் போஸ்ட், திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

திருமணத்தில் தடை உள்ளவர்கள் இத்தலம் வந்து இறைவனையும், அம்மனையும் வழிபட்டு, சம்பந்தரின் பதிகத்தை வீட்டில் அமர்ந்து காலை மாலை விடாது படித்து வந்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் பங்குனி 13,14,15 தேதிகளில் சூரியனின் ஒளி கதிர்கள் சிவ லிங்கத்தின் மீது விழுகிறது.



தடை நீக்கும் விடை வாகனன் 

கடுமையாக உழைத்தும் உழைப்பிற்கேற்ற வருமானமின்றி அவதிபடுபவரா நீங்கள்? 
செய்தொழிலில் சுணக்கமா?
கவலை வேண்டாம் !!
ஸ்திரமான பொருள் வரவிற்கு மயிலாடுதுறை --பூம்புகார் சாலையில் அமைந்திருக்கும் புஞ்சை நற்றுனையப்பருக்கு, புது வஸ்திரம் சாற்றி, அபிஷேகம் செய்து வணங்கி வர ஸ்திரமான பொருள் சேர்க்கை ஏற்படும். வருமானம் உயரும்.வளமான வாழ்வுசித்திக்கும்.




மயிலாடுதுறை பூம்புகார் சாலையில் செம்போனார்கோயில் அருகே இத்தலம் உள்ளது.
காலச்சக்கரத்தை மாற்றி அமைத்து தடைகளை 
தகர்த்து எரியும் திருகோயில் 

விராலூர் அனைவரத நடேசரின் கம்பீரமான தோற்றம். பட்டவர்த்தி அருகில் மயிலாடுதுறை வட்டம். சுற்றிலும் தேவார பாடல் பெற்ற தலங்கள், சிறப்பு வாய்ந்த பரிகார தலங்கள் சூழ நடுநாயகமாக இத்தலம் உள்ளது. அட்ட வீரட்ட தலம் கொற்கை அருகில் உள்ளது .
இறைவன் அர்ச்சுனன் வாளை ஒளித்து வைத்த திருவாளோளிபுத்தூர்
பஞ்சபாண்டவர்கள் பூசித்த இலுபப்பட்டு, அவர்கள் தங்கள் வாளை சாற்றி வைத்த சாத்தங்குடி போன்ற தலங்களை கூறலாம்.
இங்குள்ள 16 பட்டைகளை கொண்ட லிங்கத்திருமேனிக்கு அபிஷேகம் செய்யப்படும் பால் 5 நிறங்களாக மாறும் அதிசயத்தை காணலாம்.

மிகவும் சிதைவுற்றிருந்த இந்திருகோயில் ஆன்மீக அன்பர்களால் திருப்பணி செய்யப்பட்டு தற்போது மிகவும் நேர்த்தியாக விளங்குகிறது.
மயிலாடுதுறையிலிருந்து பேருந்து வசதி உண்டு .
மயிலாடுதுறை ----- மணல்மேடு மார்க்கம் 

தொடர்புக்கு திரு V.V.குமார்   9943899502
04364-258627




சுவாமிமலை அருகே சிதைந்து கிடக்கும் லிங்கத்திருமேனிகள் 

அன்பர்களே சுவாமிமலை நம் தமிழக மக்களின் உணர்வோடு ஒன்றிய அற்புத திருகோயில்களுள் ஒன்று.  தினசரி பல்லாயிரம் மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.  

இதன் அருகே(சின்ன கடைத்தெரு) மேட்டான் தெரு என்று தற்போது  அழைக்கப்படும் லிங்கத்தடியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கத்திருமேனிகள் கேட்பாரற்று வழிபாடில்லாமல்,

புறக்கணிக்கப்பட்ட நிலையில்  இருப்பது மிகவும் வேதனை தருவதாக உள்ளது.

பிரபல திருகோயில் நிர்வாகங்கள் ஏன் இத்தகைய சிதறுண்டு கிடக்கும் திருமேனிகளை கண்டுகொள்வதில்லை?

அரசு ஏன் இத்தகைய திருமேனிகளை புறக்கணிக்கிறது? 
வருமானம் தரும் கோயில்கள் மட்டுமே இலக்கா?
பின் யார் இவற்றை சீர் செய்து பிரதிஷ்டை செய்வார்கள்?பல கேள்விகள் என்னுள் எழுகின்றன.அன்பர்களே விடை தாருங்கள்!!!

படத்தில் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வர பெருமான்


இவர் எதிரிலிலேயே மற்றொரு லிங்கத்திருமேனியும் அருள்புரிகிறார்.

பாழடைந்து கிடக்கும் பரமனின் ஆலயம்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் , "காளி " திருத்தலத்திலிருந்து 1 km இல் உள்ள கன்னியானத்தம்
கைலாசநாதர் திருகோயில் .

சென்ற பிரதோஷத்தன்று 'காளி ' தரிசித்த பின்பு நான் தரிசித்த ஆலயம்.
இரண்டு தலத்திற்கும் தான் எவ்வளவு வேறுபாடு?
பிரதோஷ தினமான அன்று வௌவால்கள் மட்டுமே இறைவனை சுற்றி சுற்றி வந்து வழிபடுகிறது.
அவற்றிற்கு தெரிந்துள்ளது ஈசனின் அருள் எவ்வளவு பலமானது என்று.

பெரியவா பிறந்த புண்ணிய பூமி 


மஹா பெரியவாளை ஈன்றெடுத்த மகத்தான புண்ணிய பூமி இது.
அவர் இன்றும் இத்தலத்தில் தான் வாழ்வதாக, தனது நெருக்கமானவர்களிடம், தான் இருந்தபோதே கூறியுள்ளார்.

அந்த வீடு இன்று வேதபாடசாலையாகவும், மகா பெரியவாளின் உறைவிடமாகவும் திகழ்கிறது.

ஈச்சங்குடி எனப்படும் புண்ணிய பூமி தான் அது. குடந்தை திருவையாறு பேருந்து பாதையில் உள்ளது.

இத்தலத்தில் பெரியவா வணங்கிய, கச்சபேஸ்வரர் திருகோயில் மூலவர் கச்சபேஸ்வர பெருமான் .

அன்பர்களே வாழ்வில் ஒருமுறையேனும் தரிசியுங்கள் 




மனகவலைகள் போக்கும் மகாதேவன் ----உம்பலபாடி 


மனகவலைகள், மனநல கோளாறுகள் நீக்கும் நிலவனைந்த மகாதேவன் , உம்பலப்பாடி , கபிஸ்தலம் வட்டம் , குடந்தை-திருவையாறு சாலை.

மனக்குழப்பத்தை தீர்த்து, தெளிந்த மனதை அளிக்கிறார் இவர்.மனநோய் கண்ட பலர் 

இங்கு வந்து வணங்கி பலன் பெற்று செல்கின்றனர்.மனோகாரகரான சந்திரன் வணங்கிய தலம்.
முதலாம் குலோத்துங்கன் காலத்திய கட்டுமானம். 900 வருடங்களுக்கு முற்பட்டது.

தற்போது திருப்பணி நடை பெற்று வருகிறது.


கடக ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய விசேஷ தலம்.கல்வி அறிவு தடை நீக்கும் தலம்.

மனநல மருத்துவர்கள் வணங்க, அவர்களது செயல் திறன் கூடும்.

கபிஸ்தலத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இத்தல
ம்.
 

தொடர்புக்கு :D BALA SUBRAMANIAN
93606 70620



காசிக்கு நிகரான சண்பை (ஜம்பை)


ஜம்பை , திருவண்ணாமலை மாவட்டம், சண்பை எனப்படும் புல் வகைகள் அதிகம் வளர்ந்திருப்பதால் இந்த பெயர் பெற்றது.
இங்குள்ள காசி விஸ்வநாதர் திருகோயில் மூலவர் இந்த மாவட்டத்திலுள்ள லிங்க மூர்த்தங்களில் மிக பெரியவர்.உயரமானவர் .

அது மட்டுமல்ல!!!! காசிக்கு நிகரான ஷேத்திரமும் கூட .
அன்பர்களே வேறொரு விசேஷமும் உண்டு.திருவண்ணாமலை அக்னி தலம். இங்குள்ள ஜம்புலிங்கேஸ்வரர் திருகோயில் நீர் தலமாக போற்றப்படுகிறது.
இரண்டையும் சேர்த்து தரிசிப்பவர்களுக்கு இம்மையில் மட்டுமல்லாது மறுமையிலும் இறைவன் அருள் பெறுவார்கள்.
அன்பர்களே தவற விடாதீர்கள்.
























இத்திருகோயில் திருவண்ணாமலையிலிருந்து திருகோவிலூர் வழியில் 20 கிலோ மீட்டரில் உள்ளது .

Sunday, August 30, 2015

மகாலட்சுமி உங்கள் இல்லத்தில் நிரந்தர வாசம் 

செய்ய இங்கே வாங்க 


சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
இங்கு மகாலட்சுமி வில்வ மரமாகவே தோன்றி, அடிக்கடி சிலிர்த்து வில்வ இலைகளால் ஈசனை அர்ச்சித்ததாக ஒரு வரலாறு உண்டு. 

லட்சுமியின் பக்தியை மெச்சி ஐஸ்வர்ய மகுடத்தை அளித்தார், திருக்காமேஸ்வரர்.

 ராவணன் இவ்வாலயத்தில் வழிபாடு செய்து உடல் வலிமை பெற்றான். சுக்கிரன், குபேரன் ஆகியோர் இப் பெருமானை வழி பட்டதன் பலனாக தனாதிபதியாக விளங்கினர்.
திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து மேற்கே 32 கி.மீ. தொலைவிலும், முசிறியிலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் வெள்ளூர் கிராமம் உள்ளது. 

முசிறியிலிருந்து அரை மணி நேரத்திற்கு ஒரு முறை பேருந்து வசதி உள்ளது.


குழந்தைகள் நலம் காக்கும் குழந்தைவல்லி தாயார்

அன்பர்களே, நம் குழந்தைகள் நல்ல ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழவேண்டும். எதிர்காலத்தில் நல்ல குடிமக்களாக வளரவேண்டும் என ஆசைபடாத பெற்றோர் இருக்கமுடியுமா?
இதற்கென்றே ஒரு சிவாலயம் இருப்பது உங்களுக்கு தெரியுமா?
வாருங்கள் குழந்தைவல்லி சமேத கும்பேஸ்வரர் திருகோயிலுக்கு.


அகம் குழைந்து வேண்டுவோர்க்கு, நல்வரங்கள் தந்தருள்வாள்
குழந்தைவல்லி . வேறென்ன வேண்டும் நமக்கு?

எங்கே உள்ளது என்பதையும் கூறிவிடுகிறேன் .

திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகில் சிற்றம்பாக்கம்
என்னும் சிற்றூரில் உள்ளது இத்திருகோயில்.
பேரம்பாக்கத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவு

நெல்லிக்குப்பம் கைலாசநாதர் திருகோயில் ,  கடலூர் 


சிவநேயசெல்வர்களே, குன்றிலிட்ட விளக்கு போல் பிரகாசிக்க வேண்டிய சில அரிய ஆலயங்கள் இன்று குடத்திலி ட்ட விளக்கு போன்று இருளில் மூழ்கி கிடக்கின்றன. 

வெளிச்சத்திற்கு வர வேண்டிய அப்படிப்பட்ட ஆலயங்களுள் ஒன்றுதான் கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பதிலிருக்கும் அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் ஆலயம். 1400 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டு
பின் சோழ, நாயக்க அரசர்களால் திருப்பணி செய்யப்பட்ட பெருமை உடையது.
இங்கு நவகரகங்கள் ஒரே வரிசையில் இறைவனை நோக்கி அமைந்துப்பது சிறப்பாகும். இங்கு கிடைக்கப்பெற்ற ஜேஷ்டா தேவியின் சிலை இக்கோயிலின் பழமையை பறைசாற்றுகிறது.
இன்று அதன் பெருமையையும் சிறப்பையும் இழந்து மின்கட்டணம் செலுத்தவும் வழியின்றி,
திருப்பணியை எதிர்நோக்கி காத்திருக்கிறது.


அதிகம் அறியப்படாத அபூர்வ ஆலயங்களின் தொகுப்பு .


1. வல்லமங்கலம் சேதுபுரீஸ்வரர் திருகோயில் 


ன்பர்களே, சிவநேயசெல்வர்களே, உங்களின் சீரிய கவனத்திற்கு,
இப்போது விட்டுவிட்டால் பின் எப்போதும் காணமுடியாது இப்படி ஓர் அரிய சிவாலயத்தை. கஷ்டப்பட்டு வரைந்த எழில்ஓவியத்தை
கண்ணாபின்னவென்று கிழித்துபோட்டது போல் உள்ளது இத்திருகோயிலின் இன்றையநிலை.
அமர்ந்த நிலையில் ஒய்யாரமாக அமைந்துள்ள துவார பாலகர்கள் சிலை. ,
மார்பில் சிவலிங்கத்தை தாங்கிய ஐந்தடி உயரமுள்ள கம்பீரமான
பெருமாள் எனஇத்திருகோயிலின் பெருமைகள் அளவிடற்கரியது.
ஆனால் என்னே பரிதாபம்!!!!!!
பக்தர்கள் வருகை என்பதே கிடையாது மாதத்திற்கு ஓரிரு நாட்களை தவிர. பிரதோஷ வழிபாடும் கிடையாது.
இப்படிப்பட்ட திருகோயில்களை அன்பர்களேதயவுசெய்து, சிதைந்த கோயில்தானே என்று அலட்சியபடுத்தாமல் சென்று தரிசனம் செய்யுங்கள் . இது எனதுதாழ்மையான வேண்டுகோள் .
(குடந்தை நகர் அருகில் உள்ள நாச்சியார் கோயிலுக்கு மிக அருகில் உள்ள வல்லமங்கலம் சேதுபுரீஸ்வரர் திருகோயில்.)