Saturday, September 15, 2018

சித்தத்தை சிவன் பால் வைத்த அடியார் பெருமக்களுக்கும் , உழவார பணி மன்றத்தினருக்கும் உடனடி கவன ஈர்ப்பு பதிவு இது 

அன்பர்களே ....தாமிரபரணி புஷ்கரணி கொண்டாடப்பட்டு வரும் இவ்வேளையில் புனித தீர்ததங்களை நாம் எவ்வாறு வைத்திருக்கிறோம் என்று தெரிந்து கொள்ள வேண்டும் .....நம் நாட்டில் உள்ள தீர்த்தங்களையும் , திருக்கோயில் குளங்களையும் முறையாக பராமரித்தாலே போதும் .....தண்ணீருக்காகஅண்டை அயல் மாநிலங்களை நாம் கெஞ்சி கொண்டிருக்க வேண்டியதில்லை.

நகரங்களில் புனிதமான காஞ்சி மாநகரில் நடுநாயகமாக அமைந்து பெருமை சேர்ப்பது சர்வ தீர்த்த குளம் .....இத்திருக்குளத்தின் பெருமை சொல்லில் அடங்காது ...சிவபெருமானின்  ஆணைக்கிணங்க கங்கை காவேரி உள்ளிட்ட அனைத்து புனித நதிகளும் இத்திருக்குளத்தில் அடக்கம் ......அதோடு இந்த நதிகள் தீர்த்தேஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கம் ஒன்றை நிறுவி பூசித்து பேறு பெற்றதாக கஞ்சி புராணம் கூறுகிறது ...

இங்கு பிதுர் கடன்கள் நிறைவேற்றுவதால் , நம் முன்னோர்கள் மிகுந்த திருப்த்தி அடைகின்றனர் ..இன்றும் மக்களால் இங்கு பிதுர் கடன்கள் செய்யப்படுகிறது .

அதோடு இத்தீர்த்தகுளத்தின் 4 கரைகளிலும் ஏராளமான புராதன திருக்கோயில்கள் அமைந்து காஞ்சி நகருக்கு பெருமை சேர்க்கின்றன ...

மேற்கு கரையில் :
அருள்மிகு காசி விஸ்வநாதர் 
அருள்மிகு காமேஸ்வரர் 
அருள்மிகு இரண்யேஸ்வரர் 
அருள்மிகு தீர்த்தேஸ்வரர் 

வடக்கு கரையில் 
அருள்மிகு லகு லீஸ்வரர் என்கிற தவளேஸ்வரர் திருக்கோயில் 

கிழக்கு கரையில் 
அருள்மிகு கங்காதேஸ்வரர் 
அருள்மிகு அனுமந்தேஸ்வரர் 

தெற்கு கரையில் 

அருள்மிகு மல்லிகார்ஜுனர் 
அருள்மிகு சீதேஸ்வரர் 
அருள்மிகு லக்க்ஷுமனேஸ்வரர் திருக்கோயில் 

தெற்கு குளக்கரை படிக்கட்டில் 
அருள்மிகு ராமநாதேஸ்வரர் திருக்கோயில் 

ஆகிய திருக்கோயில்கள் உள்ளன ..சரி விஷயத்திற்கு வருகிறேன் .....சில தினங்கள் முன்பு நான் சென்றிருந்தபோது கண் காட்சிகள் அதிர்ச்சிக்கு 
உள்ளாக்கின ......

அன்பர்களே அங்கு சுற்றிலும் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளால் சொல்லொணா அசுத்தத்திற்கும் , ஆக்ரமிப்பிற்கும் ஆளாகியுள்ளது இத்திருக்குளம் ..மூக்கை பிடித்து கொண்டு செல்ல வேண்டிய நிலை ..

துணி துவைப்பதிலிருந்து , காலை கடன்கள் கழிப்பது வரை அனைத்துமே இங்குதான் ....படித்துறையின் நிலையோ கேட்கவே வேண்டாம் .....புதர்கள் மண்டி ...நாற்றம் குடலை பிரட்டுகிறது ....

அன்பர்களே யாரிடம் சொல்வது ?  எவரிடம் முறையிடுவது..? 

ராமர் , சீதை , லக்க்ஷுமணன் மன்மதன் , இரணியன் பூசித்த லிங்கங்கள் தனித்தனி கோயிலாக அமைந்துள்ளன .ஆனால் பக்தர்கள் வருகை என்பது கிடையாது ..பிரதோஷத்திற்கு மட்டும் சில பக்தர்கள் வருவதாக தெரிவிக்கிறார்கள் ....

அன்பர்களே  என் வேண்டுகோள் இரண்டு தான் ...

1. உடனடியாக இத்திருக்குளம் கழிவுகள் அகற்றப்பட்டு சீர் செய்யப்பட வேண்டும்.
     இல்லையேல் இத்திருக்குளம் ஒரு மினி கூவமாக மாறிவிடும் அபாயம் உள்ளது .

2. காஞ்சி காமாக்ஷி , ஏகாம்பரேஸ்வரர் , வரதராஜ பெருமாள் திருக்கோயில்களுக்கு செல்லும் பக்தர்கள் அற்புத புராதன பொக்கிஷங்களான மேற்சொன்ன திருக்கோயில்களையும் வணங்கி அருள் பெற வேண்டும் 

படத்தில் மிக பிரம்மாண்டமான இரண்யேஸ்வரர் ........மன்மதன் வழிபட்ட காமேஸ்வரர் 







லக்ஷ்மனேஸ்வரர்


Sunday, September 9, 2018

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ......

அன்பர்களே ....
அவன் தரிசனம் பெறுவதற்கே அவன் மனது வைக்க வேண்டும் ...அப்படியென்றால் அவன் திருப்பணியில் பங்கு 
பெறுவது என்றால் பல பல ஜென்மங்களில் புண்ணியம் செய்திருக்க வேண்டுமல்லவா?

ஆன்மீக நெறியிலிருந்து சற்றும் வழுவாத நம் மாமன்னர்கள் பல்லாயிரக்கணக்கான திருக்கோயில்களையும் 
திருக்குளங்களையும் அமைத்து பராமரித்தனரே?  அவர்கள் கட்டிய அரண்மனைகள் இன்று காணப்படவில்லை
ஆனால் அவர்களால் கட்டப்பட்ட திருக்கோயில்கள் வானளாவ இன்றும் அவர்கள் பெருமையை பறைசாற்றுகின்றன அல்லவா?

அவ்வாறு அவர்களால் அரும்பாடுபட்டு உருவாக்கப்பட்ட திருக்கோயில்கள் பராமரிப்பின்றி பாழாகும்போது சிதைவுறும்போது நமக்கென்ன என்று வாளாவிருப்பது எத்தகைய அறியாமை?

நம் அறியாமை அக இருளை நீக்கி , நாம் உய்வதற்காகவே வாராது போல் வந்த மாமணியாக , அன்பர் ஒருவரது கனவில் தோன்றி தன இருப்பிடத்தை உணர்த்தி கோயில் கட்ட பணித்திருக்கிறான் இறைவன் 
என்றால்,  அன்பர்களே இந்த வாய்ப்பினை நாம் தவற விடலாமா?

வாருங்கள் போவோம் ...
வேலூர் மாவட்டம் ஆம்பூர் தாலுக்கா குருவராஜபாளையம் வழி பாக்கம் பாளையம் அஞ்சல் பாக்கம் கிராமத்தில் 1000 வருடங்களுக்கும் மேற்பட்ட திருக்கோயில் ஒன்றில் வீற்றிருக்கும் கைலாசநாதர் பெருமானே தனக்கு கோயில் அமைக்க ஆணையிட்ட பெருமான்...

கொடுத்து வைத்த பாக்கம் கிராம மக்கள் சிரமேற்கொண்டு திருப்பணிகளை ஆரம்பித்து உள்ளனர் இறைவன் திருவருள் ஒன்றையே துணையாக கொண்டு ...

அந்த சகோதரர்களுக்கு நாம் உதவாமல் யார் உதவுவார்கள் ?  அன்பர்களே...வாங்கி கணக்கு விபரங்கள் மற்றும் 
அலைபேசி எண்கள் தந்துள்ளேன் ...

அவன் திருப்பணியில் பங்கு பெற்று அவன் அருளுக்கு பாத்திரம் ஆகுங்கள் ....

தொடர்புக்கு 
சிவ குபேந்திரன் - 9345883326, 
சிவ இராமமூர்த்தி - 9025345747, 
சிவ ஹரிவசந்த் - 8695875868.


Account No.6655846738, IFSC Code:IDIB000O001,
 Indian Bank-odugathur Branch
Bank Account Name: ARULMIGU UMAMAHESWARI UDANURAI KAILAYANATHAR TEMPLE TRUST

கவனிக்க : IFSC code-ல்  மூன்றாவது சைபர் அடுத்து உள்ளது ஆங்கில எழுத்து o வாகும் ...



அஞ்சல் கணக்கு எண் : 3935204147








Saturday, August 18, 2018

அன்பர்களே......பூர்வ ஜென்ம புண்ணியம் என்கிறார்களே அதை எளிதில் எப்படி அடைவது?

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ....என்பார் மாணிக்கவாசகர் 
அவனுடைய திருக்கோயில் திருப்பணிக்கு உதவுவதற்கும்  அவன் அருள் கண்டிப்பாக வேண்டும் ...

சிவ  திருப்பணிக்கென ஒரு செங்கல்லை வழங்கினாலே நம் பல தலைமுறையினர்இவையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து பின்  கைலாயத்தில் நித்ய வாசம் செய்யும் பேற்றினையும் பெறுவர்   என்பது திண்ணம் ....

நம் நாட்டை ஆண்ட மாமன்னர்கள் அதனாலேயே பற்பல கற்கோயில்களை கட்டினார்கள் 
அவை இன்றும் கம்பீரமாக எழுந்து நின்று அவர்களின் பெயரை உலகறிய செய்து கொண்டிருக்கின்றன ....

அப்படிப்பட்ட ஒரு பூர்வஜென்ம பாக்கியத்தை நாம் எளிதில் அடைய சந்தர்ப்பம் ஒன்று வந்துள்ளது 
அன்பர்களே பயன் படுத்தி கொள்ளுங்கள் ......

வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டம் வேலூர் பாளையம் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் பிரம்மேஸ்வர் ஆலய திருப்பணிக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் ..மிகவும் சிரமப்பட்டு திருப்பணியை நிறைவேற்றி 
உள்ளனர் எனினும் எஞ்சிய திருப்பணிகளை விரைந்து முடித்து குடமுழுக்கு நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் கிராம மக்கள் .....

கும்பாபிஷேகம் செய்ய நாள் குறித்து விட்ட போதிலும், குறித்த நேரத்தில் பணிகள் முடியாமல் பொருளாதார பற்றாக்குறையினால் தடைபட்டுள்ளது ..

எத்தனை சிறிய உதவியானாலும் அன்பர்களே அவை சிறு துளி பெரு வெள்ளமாக பெருகும் இறைவன் அருளால் ....

இத்தகைய அரிய திருப்பணியில் ஈடுபட்டிருக்கும் அன்பர்கள் பெரும் செல்வச்செழிப்பில் திளைப்பவர்கள் அல்லர் ..  அன்பர்களே.... அவர்கள் மிகவும் எளிய வாழ்க்கையை நடத்துபவர்கள் தாம் ...

அவர்களுக்கு உதவுவது ஒன்றே பல பிறவிகளில் நாம் சேர்த்து வைக்கப்போகும் பூர்வஜென்ம புண்ணியம் ...

அவர்களது அலைபேசி எண்கள் மற்றும் வங்கி கணக்கு விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களில் உள்ளது ...அன்பர்களே அவற்றை கிளிக் செய்து பெரிது படுத்தி பார்க்கலாம் .






Tuesday, August 14, 2018

விஷ கடிகளால் மரணம் .....விஷ ஜுரங்களால் வேதனை .....இங்கு அறவே இல்லை ......

ஆம் அன்பர்களே .....சூரியன் வழிபட்ட (பரிதி என்றால் சூரியன்)திரு பரிதியூர் எனப்படும் பருத்தியூர் என்னும் தலத்தில் தான் இத்தகைய சிறப்பு ....
இங்கு கோயில் கொண்டு அருளும் அன்னை பிரசன்ன  பார்வதி சமேத  விஷஹரேஸ்வரர் இத்தகைய சிறப்பை அருள்பவர் ...
இங்கு வசிப்பவர்களை விஷ ஜந்துக்கள் தீண்டுவதில்லை ......விஷ ஜுரங்கள் பாதிப்பதில்லை என கூறுகிறார்கள் ......இங்கு வந்து தரிசிப்பவர்களுக்கும் இதே விதி பொருந்தும் .....

எங்குள்ளது ?

திருவாரூர் மாவட்டம் குடந்தை நன்னிலம் சாலையில் அமைந்துள்ளது இந்த சின்னஞ்சிறு கிராமம் ..விவசாயம் பிரதான தொழில் .....
அருகில் புகழ்பெற்ற ஸ்ரீ வாஞ்சியம் திருத்தலம் .அமைந்துள்ளது  ..
ஆவணம் பருத்தியூர் என அழைக்கப்படும் இத்தலம் திருநல்லகூரூர் (கூகூர்)என வழங்கப்படும் தேவார  வைப்பு  தலம் அருகில் பிலாவடி தாண்டியதும், வருகிறது ....
பேருந்து நிறுத்தத்திலிருந்து சற்று தொலைவில் திருக்கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு நன்கு பராமரிக்கப்படுகிறது 

புராண வரலாறு 

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது தோன்றிய ஆலகால விஷம் சூரியனையும் விட்டுவைக்கவில்லை ....ஆம்!  சூரியன் தன் அழகையும் ஆற்றலையும் இழந்து மெலிந்தான் ....
ஈசனை சரணடைந்தான் .பின் இறைவன் கட்டளைப்படி இத்தலத்திற்கு வந்து தீர்த்தம் உருவாக்கி பலகாலம் தவமிருந்து இங்கு சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ள இறைவன் அருளால் இழந்த தன் ஆற்றலை திரும்ப பெற்றதாக வரலாறு .

எனவே இறைவன் திருநாமம் விஷ ஹரேஸ்வரர் என வழங்கப்படுகிறது ....
பின்னர் ஆண்ட மன்னர்களால் திருக்கோயில் கட்டப்பட்டு , பின் ஆண்டுகள் செல்ல செல்ல சிதிலமடைந்து ,  தற்போது ஆன்மீக அன்பர்களின் பெரு முயற்சியால் திருக்கோயில் புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளது ....

அன்பர்களே பரிதி வழிபட்ட இப்பெருமானை நீங்கள் தரிசித்து நோய் இல்லா பெருவாழ்வு பெறுங்கள் ....அருகில் ஆவணம் ,ஸ்ரீவாஞ்சியம் போன்ற ஏராளமான தலங்கள் உள்ளன .
ஆலய அர்ச்சகர் அலைபேசி எண் தந்துள்ளேன் ...அவரை தொடர்பு கொண்டு திருக்கோயிலை நீங்கள் தரிசனம் செய்யலாம் .

அரும்பாடு பட்டு புராதன திருக்கோயில்களை புனரமைப்பது நம் நலத்திற்காகவே ....எனவே ஸ்ரீவாஞ்சியம் மற்றும் நவகிரக யாத்திரை செல்பவர்கள் தவறாமல் இத்தலத்திற்கு வந்து தரிசனம் செய்யுங்கள் ....இறைவன் அருள் பெற்று செல்லுங்கள் 

அர்ச்சகர் திரு ராஜப்பா குருக்கள் 

அலைபேசி எண் 9943343031





Monday, August 6, 2018


உத்தர்கண்ட் மாநிலம் டேராடூன் 
லக மண்டல்  .
திருக்கோயில்கள் 


காண முடியுமா இத்தகைய அரிய காட்சியை? 
கிடைத்தவர்கள் பல பிறவிகளில் கொடுத்து வைத்தவர்கள்!!

உத்தர்கண்ட் மாநிலம் , டேராடூன் மாவட்டம் ,லக மண்டல்  , முசெளரி ---யமுனோத்ரி வழித்தடத்தில் இருக்கும் புராதன பெருமை வாய்ந்த சிவஸ்தலம்.

தலைநகர் டேராடூன் நகரிலிருந்து 125 கிலோமீட்டரில் அமைந்துள்ளது .அழகிய மலைகள் சூழ அமைந்துள்ளது ...
சிறிதும் பெரிதுமாக லக்க்ஷம் லிங்கங்களை கொண்டது இத்திருக்கோயில் ....
லக மண்டல் என்றால் லக்க்ஷம் திருக்கோயில்கள் அல்லது லக்க்ஷம் சிவலிங்கங்கள் என பொருள்படும் .....


தற்போது அவ்வளவு இல்லை எனினும் பாண்டவர்கள் காலத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது ...

பாண்டவர்கள் வனவாசத்தின் போது பல நாட்கள் இவ்விடம் தங்கியிருந்ததாக வரலாறு கூறுகிறது.


அரக்கு மாளிகையில் தீ வைக்கப்பட்டு,துரியோதனாதிகளிடமிருந்து தப்பித்த பாண்டவர்கள், இவிடம் தங்கி பல சிவ மூர்த்தங்களை அமைத்து வழிபட்டுள்ளனர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தரகண்ட் மாநிலத்தின் 
லக மண்டல்திருகோயில்.
பல பெருமை வாய்ந்த முற்றுப்பெறாத தலங்கள் இங்கு உண்டு. கண்ணாடியின் வழவழைப்பை மிஞ்சும் இறைவனின் திருமேனியை பாருங்கள்.

மேலும் ஒரு தல புராணமும் நிலவுகிறது .....பிரம்மனும் விஷ்ணுவும் தமக்குள் யார் பெரியவர் என சண்டையிட்ட பொது மிகப்பெரிய ஜோதி பிழம்பாய் , அடிமுடி காண இயலாதவராய் இருவருக்கும் நடுவில் எழுந்தருளியதாக 
அப்போது பிரம்மன் விஷ்ணு இருவரும் இங்கு இறைவனை ஸ்தாபித்து வழிபட்டதாகவும் வரலாறுள்ளது ..

அவரே மஹா மண்டலேஸ்வர் என்னும் பெயரில் எழுந்தருளியுள்ளார் ...

இப்பதிவை கண்ணுறும் அன்பர்கள் எவரேனும் ஒருவராவது இத்தலத்திற்கு சென்று வழிபடுவராயின் அளவற்ற மகிழ்ச்சியை அடைவேன்.

ஹரித்துவார் நகரிலிருந்து 165 கிலோமீட்டரிலும் , ரிஷிகேஷிலிருந்து 151 கிலோமீட்டரிலும் இத்தலம் அமைந்துள்ளது 

Location: on Mussoorie – Yamnotri motor able road, about 5kms ahead of Bernigad









Monday, July 2, 2018

மறைந்து நின்றிந்த மாமணி சோதியான் .......பூமியை பிளந்து வந்துள்ளான் நாம் உய்வதற்காக ....

எத்தனை எத்தனை ஞானிகள் , ரிஷிகள், மகான்கள் , முனிவர்கள் சித்த புருஷர்களால் வணங்க பட்டிருப்பார் இவர்?  எத்தனை திருவிழாக்கள் , உற்ஸவங்கள் கண்டிருப்பார் ? எத்தனை பிரம்மாண்டமான திருக்கோயிலில் குடியிருந்து அருள்புரிந்திருப்பார்? 

இப்படிப்பட்ட திருமேனிகள் நமக்கு கிடைக்குமாயின் அதை விட நாம் செய்துள்ள தவம் வேறென்ன உள்ளது ?

வராது போல் வந்த மாமணியாக வந்துள்ள இப்பெருமானுக்கு திருக்கோயில் அமைக்க நாம் கொடுத்து அல்லவா வைத்திருக்க வேண்டும் ? 

வாருங்கள் போவோம் அன்பர்களே அத்திப்பாக்கம் என்னும் கிராமம் நோக்கி .....
இங்கு மிக பிரம்மாண்டமான திருமேனியராக, நம்மை ஆட்கொள்வதற்காக பலகாலம் பூமியில் புதைந்திருந்த 
இப்பெருமான் கண்டெடுக்கப் பட்டுள்ளார் ..சுமார் 2500 ஆண்டுகள் பழமையானவராக கருதப்படுகிறார் ..
கிராம மக்களால் தற்போது திருப்பணி துவங்கப்பட்டுள்ளது ....

தற்போது தரைத்தளம் வரையே கட்டப்பட்டுள்ளது ....எஞ்சியிருக்கும் பணிகளை முடிக்க , அன்பர்களே அனைவரது ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது ...
விவசாயத்தை பிரதானமாக கொண்ட கிராம மக்களால் பிறரது உதவி இல்லாமல் திருப்பணியை முடிப்பது மிக சிரமம் அல்லவா?  

ஆகவே இதை கண்ணுறும் ஆன்மீக அன்பர்கள் , சிவ பக்தர்கள் , பொது மக்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் .....

கீழ் வரும் அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு உங்கள் உதவியை நல்குங்கள் ....இறைவன் அருளுக்கு பாத்திரமாகுங்கள் ......
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கிராம மக்களுக்கு உதவிடுங்கள் ...

இருப்பிடம் :  அத்திப்பாக்கம் கிராமம் விழுப்புரம் மாவட்டம் , திருக்கோவிலூர் வட்டம் , திருவண்ணாமலையிலிருந்து திருக்கோவிலூர் செல்லும் வழியில் உள்ளது .....

அலைபேசி எண்கள் :

சிவ ஈஸ்வரன் 9176757479
சிவ  ஏழுமலை (பாண்டிச்சேரி) 8300086563
சிவ  மணிகண்டன்(அத்திப்பாக்கம்) 8523940178

சிவ  ஏழுமலை முதலூர் 9865629567





Saturday, June 23, 2018

விபத்திலிருந்து காக்கும் விடைவாகனன் 

வாகன விபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தற்போது சர்வசாதாரணமாகிவிட்டது.
நாளிதழ்களை திறந்தால் தினசரி 10 வாகன விபத்துகளாவது அங்கங்கு ஏற்படுவதை நாம் பார்க்கிறோம்.
விபத்துகள் இல்லாத நாட்களே இல்லை என்றாகிவிட்டது.

இத்தகைய விபத்துகளில்லிருந்து நம்மை பாதுகாத்து கொள்வதற்கு நாம் வணங்க வேண்டியது தஞ்சை மாவட்டம் திருவையாறு, திருநெய்த்தானம் அருகில் இருக்கும் "திருப்பெரும்புலியூர்" வியாக்ரபுரீஸ்வரர்
ஆலயமாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிக புராதனமான ஆலயத்தில், நம் வாகனங்கள் பழையதோ புதிதோ, எடுத்துச் சென்று வழிபட, விடைவாகனன் அருளால், விபத்தில்லா வாழ்வு நாம் பெறலாம்.


ஐந்து புலியூர்களில் இதுவும் ஒன்று .

மற்ற புலியூர்கள் , திருஓமாம்புலியூர் , எருக்கத்தம்புலியூர் ,பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்),பாதிரிபுலியூர் 

தஞ்சையிலிருந்து ,கும்பகோணத்திலிருந்து ,திருவையாறிலிருந்தும் பேருந்து வசதிகள் நிறையவே உள்ளது ..

இறைவி :சௌந்தர்யநாயகி , சம்பந்தரால் தேவார பாடல் பெற்ற இத்தலம் ராஜராஜ சோழன்  காலத்தியது ..
அருணகிரி நாதரும் இத்தல முருகன் குறித்து திருப்புகழ் பாடியுள்ளார் ..

தலவிருட்சம் சரக்கொன்றை .....தீர்த்தம் காவேரி 





Tuesday, June 12, 2018

நலிவடைந்த திருக்கோயில்களில் வழிபாடு செய்யலாமா?
சிதைந்த திருமேனிகளை வணங்கலாமா?

பலருக்கும் இந்த சந்தேகம் உள்ளது ...அன்பர்களே ஒரு வடமொழி ஸ்லோகம் இதற்கு வழி சொல்கிறது .

சிதைந்த சிவாலயங்களை சீர்திருத்துவது , பூசை புனஸ்காரங்களுக்கு வழி வகை செய்வது , அங்கு விளக்கேற்றுவது, திருப்பணிக்கு உதவுவது , போன்றவை அஸ்வமேத  யாகம் செய்வதற்கு ஒப்பாகும் 
என்கிறது அந்த வடமொழி ஸ்லோகம் .....
அன்பர்களே நம் தாய் தந்தைக்கு , நம் நெருங்கிய உறவினருக்கு சந்தர்ப்ப வசத்தால் கை , கால்கள் உடைந்தால் , உடல் உறுப்புகள் சேதமடைந்தால் நாம் அவர்களை ஒதுக்கி விடுவோமா ?

மருத்துவம் பார்க்க மாட்டோமா?அதிக கவனம் அல்லவா எடுத்து கொள்ளவேண்டும் ?
ஒரு திருக்கோயில் சிதிலமடைய துவங்குகிறது என்றால் பல ஆண்டுகளாக கவனிப்பின்றி உள்ளது என்று தானே அர்த்தம் ....நம்மால் புறக்கணிக்கப்படுகிற அத்தகைய திருக்கோயில்களை திருமேனிகளை புனரமைப்போர்க்கு குறைந்த பட்சம் நம்மால் இயன்ற உதவிகளையாவது செய்ய வேண்டாமா?

இம்மைக்கும் மறுமைக்கும் நம்முடைய சந்ததியினருக்கும் பல தலைமுறைகளுக்கு பிறகும் நன்மை பயக்க கூடிய அரிய செயல் இதை விட வேறென்ன உள்ளது ....?  

நம்மால் சேர்த்து வைக்கப்படுகிற சொத்துக்களை விட புண்ணிய காரியங்களே நம் தலைமுறையினரை வாழ்வாங்கு வாழவைக்கும் .....

அன்பர்களே கும்மிடிப்பூண்டி பொன்னி அம்மன் கோவில் அருகே உள்ள இந்த பெருமானுக்கு ஆவுடையார் மற்றும் நந்தியெம்பெருமான் செய்யப்படவேண்டியுள்ளது ......1 டி உயரம் கொண்ட நந்தி 5000 ரூபாயும் ஆவுடையார் சுமார் 10,000 முதல் 25000 வரையும் அளவிற்கு தகுந்தவாறு ஆகிறது ...

இம்மாதிரி பல தலங்களில் இவர்கள் சேவை செய்து வருகின்றனர் ......மேற்கூரை இன்றி இருக்கும் திருமேனிகளுக்கு மேற்கூரை அமைக்கும் பணியும் செய்து தருகின்றனர் ..

அலைபேசி எண் குறிப்பிட்டுள்ளேன் ....

சிவ கைங்கர்யம் செய்து அவனருளை அடைய போகிறவர் யார் ? என்பதை உங்கள் முடிவிற்கே விட்டு விடுகிறேன் ...

அவன் அருள் பெற்றவர்கள் தானே அவன் திருப்பணிக்கு உதவ முடியும்?
உதவ நினைப்போர் கீழ்கண்ட அடியார் பெருமக்களை அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் .


அடியார் திரு ஜெயபாலன் அவர்கள்  6382588180
அடியார் திரு வெங்கடேசன் அவர்கள் 9444352848


Tuesday, June 5, 2018

குடும்ப மகிழ்ச்சி கூட்ட குமாரபுரி (பெரியபாளையம்) வாங்க ......

செண்பகாரண்ய ஷேத்திரம் எனப்படும் ஆரணி நதியோரம் அமைந்துள்ள 10 சிவாலயங்களில் முதன்மையானகாமாக்ஷி உடனுறை பர்வதீஸ்வரர் திருக்கோயில் கொசவன்பேட்டை ..
தற்போது கொசவன்பேட்டை என வழங்கப்படும் இத்தலம் பெரியபாளையம் அருகில் ஆரணி செல்லும் சாலையில் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ...

குமரன் பிரதானமாக கோயில் கொண்டுள்ளமையால் குமாரபுரி என்பதே மருவி கொசவன்பேட்டைஎன கூறப்படுவதாக கருத்து நிலவுகிறது .....

 மேற்கு நோக்கிய அற்புதமான திருக்கோயில் .திருப்பணி செய்யப்பட்டு புத்தம் புதிதாக விளங்குகிறது
மூலவர் சுமார் 5 அடி உயரத்தில் நீண்ட பாணம் கொண்டு தேஜோமயமாக அருட்காட்சி நல்குகிறார் பர்வதீஸ்வரர் .

அடடா என்ன அழகு...? என காண்போர் வியக்கும் அற்புத பேரழகோடு நீண்டு நெடிதுயர்ந்த, கைகளில் அங்குசம் பாசம் தாங்கி , அபயஹஸ்தங்களுடன் ,ஒரு காலை முன்னர் வைத்து பெண்களுக்குரிய நளினங்களுடன்6 அடி உயரத்தில் அன்னை காமாக்ஷி காட்சி தருகிறாள் ..வைத்த கண் வாங்காமல் அவளை உற்று நோக்குகிறோம் ..

அவள் அழகுக்கு அழகு சேர்ப்பதுபோல் அலங்கார ரூபிணியாக வெள்ளி கவசங்களுடன்  சிவாச்சாரியார் காங்கேயன் அவர்களின் கைவண்ணம் மெச்சத்தக்கது ...சுமார் 3 தலைமுறைகளாக இவர்கள் இத்திருக்கோயிலுக்கு சேவை புரிகிறார்கள் .....இவர் கிரஹம் கோயில் வளாகத்திலேயே உள்ளது ...
பலா மரம் தல விருட்சம் 


அம்பாள் வலப்புறம் அமர்ந்துள்ளதால் கல்யாண கோலம் கொண்டு தன்னை நாடி வரும் திருமணமாகாத அன்பர்களுக்கு திருமண வரம் நல்குகிறாள் ....

சிவாலயத்திற்குரிய அனைத்து விசேஷங்களும் சிறப்பாக நடைபெறுகிறது என்றாலும் திருவாதிரை நன்னாள் குறிப்பிட தகுந்தது .....அன்று காரைக்கால் மாங்கனி திருவிழாவை போலவே இங்கும் இறைவன் உலா வரும் போது அவர் மீது அன்பின் மிகுதியால் பழங்களை வீசி மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர் .
அன்று ஊரே விழா கோலம் பூண்டிருக்கும் .....பெண்கள் வாசலில் கோலமிட்டு இறைவன் வருகைக்காக காத்திருப்பர்

இங்கு வந்து வழிபடுவோருக்கு திருமண தடை நீக்குவதோடு .....வாத வழக்குகளில் வெற்றி தம்பதியினரிடையே ஒற்றுமை மொத்தத்தில் இங்கு வந்து வழிபடுவோர் குடும்பத்தில் இன்னல்கள் நீங்கும் ....குறைவில்லா  மகிழ்ச்சி கூடும் ...
எனவே அன்பர்களே வாழ்வில் ஒருமுறையேனும் இத்திருக்கோயில் வந்து இறைவனையும் இறைவியையும் வணங்கி செல்லுங்கள் .....பின் அவர் பார்த்துக்கொள்வார் உங்களை .....

குருக்கள் அலைபேசி எண் :8124602646

ஆவடி ,  பெரியபாளையத்திலிருந்து பேருந்து வசதி நிறைய உள்ளது ..





Saturday, June 2, 2018

⧭ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டை .......
          ⧭அமைதியாய் அருளும் அரன்....... 


எப்போதும் பரபரப்பாய் இயங்கும்  ,ஆயிரக்கணக்கானோர் பணிபுரியும் அம்பத்தூர் தொழிற்பேட்டை 
ரயில்நிலையம் பட்டரவாக்கம்....

இங்கு இருக்கும் இடமே தெரியாமல் சிதைந்த நிலையில் கோயில் கொண்டுள்ளார் ஜகத் ஜனனி சமேத ஜெகதீஸ்வரர் .....

300 ஆண்டுகளுக்கும் முற்பட்டவர் .......3 ஆண்டுகளாக இவருக்கு திருக்கோயில் கட்ட முயன்று கடைக்கால் பணிகளோடு திருப்பணி நின்று  விட்டது.....

பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றாலும் தினசரி பக்தர்கள் வருகை என்பது அறவே இல்லை 
பிரதோஷத்தன்று மட்டும் மக்கள் கூடுவதாக சொல்கிறார்கள் ....

இப்பெருமான் கோயில் கொண்டதற்கான வரலாறு எதுவும் அறிந்துகொள்ள இயலவில்லை 


ஆவுடையார் பின்னப்பட்டுள்ளதால் ,பெருமானை தனியாக எடுத்து பாலாலயம் செய்துள்ளார்கள் ....

சிவாச்சாரியார் திரு முத்துக்குமரன் முகப்பேரிலிருந்து வந்து பூசை செய்து விட்டு செல்கிறார் 
அவர் அலைபேசி எண் 9444178149....

அருகில் பொன்னியம்மன் திருக்கோயில் நல்ல நிலையில் இயங்குகிறது ...பெருமாள் கோவில் ஒன்றும் இருப்பதாக கூறுகிறார்கள் ......

பட்டரவாக்கம் ரயில் நிலையம் அருகில் இத்தலம் உள்ளது ......முதல் குறுக்கு பிரதான தெருவின் முடிவில்  அமைந்துள்ளது...

விசாரித்து செல்லலாம் ....

அஸ்பெஸ்டாஸ்  கூரையில் அருளும் இப்பெருமானை எப்போதும் தரிசனம் செய்யலாம் ..ஆனால் சற்று கூர்ந்து கவனித்தால் தான் கோயில் இருக்குமிடம் தெரிகிறது .....
கோயில் வளாகம் தொழிற்சாலை கழிவுகள் கொட்டும் இடமாக உள்ளது , வருத்தம் அளிப்பதாக உள்ளது 


அன்பர்களே ......ஜெகதீசனை தரிசனம் செய்யுங்கள் .....திருக்கோயில் நிலையை உலகறிய செய்யுங்கள் 
அரன் திருக்கோயில் முற்றுப்பெற உதவுங்கள்.......
சிவாச்சாரியார் திரு முத்துக்குமரன் 
  அலைபேசி எண் 9444178149....