Monday, March 29, 2021


அல்லல் என் செய்யும்? அருவினை என் செய்யும்? அகரம் மகாதேவர் அருள் இருக்கையில் ...!

அன்பர்களே ....! பிறவி பெரும்பயன் உள்ளவர்களே இத்திருத்தலத்தை  தரிசிக்க இயலும் ...நீங்கள் அனைவரும் இப்பயனை பெறவேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு.....

திருவள்ளூர் மாவட்டம் திருக்கோயில் உடைத்து என்றால் அது மிகையில்லை .அதிகமான கிராமங்களையும் அங்கெல்லாம் மிக புராதமான திருக்கோயில்களையும் கொண்டுள்ளது திருவள்ளூர் மாவட்டம் .

விவசாயம் பிரதான தொழில் என்பதால் , எங்கெங்கு காணினும் விவசாய நிலங்களும் தூய்மையான காற்றும் மனதுக்கு அமைதி தரும் சூழலில் அத்தகைய திருக்கோயில்கள்  அமைந்திருக்கும் ...

அப்படிப்பட்ட ஒரு திருக்கோயிலை தான் உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன் ....

1400 ஆண்டுகள் பழமையான மனோன்மணி அம்பிகை சமேத மகாதேவர் திருக்கோயில் அகரம் கிராமம் .திருவள்ளூர் மாவட்டம் , கடம்பத்தூர் ஒன்றியம் ....கடம்பத்தூரிலிருந்து பேரம்பாக்கம் செல்லும் வழியில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அகரம் கிராமம் .

திருவள்ளூர் மாவட்ட திருக்கோயில்களிலேயே மிகப்பெரிய லிங்கத்திருமேனி இத்திருக்கோயிலில் தான் உள்ளது ...

இப்பெருமானை பற்றிய புராண வரலாறுகளோ , செவி வழி செய்திகளோ இதுவரை அறியப்படவில்லை ...
சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக, விவசாய நிலமாக இருந்த இப்பகுதியில் , சற்றே மேடான ஒரு பகுதியிலிருந்து சிறிது சிறிதாக வெளியேற திருவுளம் கொண்டார் இப்பெருமான் ...

தோண்டி பார்த்தபோது மிகப்பெரிய பாண லிங்க வடிவில் எழுந்தருளினார் ..

பன்னெடுங்காலமாக தன் இரு பிள்ளை (யார்கள்)களுடன்  வெட்ட வெளியில் அருள்பாலித்து வந்த இப்பெருமானுக்கு அரும்பாடுபட்டு அருமையான திருக்கோயில் ஒன்றை அன்பர்கள் அமைத்துள்ளனர் ..

அன்னை மிகவும் பின்னப்பட்டு விட்டதால் புதிதாக நிறுவியுள்ளார்கள் ....

இன்றெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் ..அவ்வளவு அழகு மனோன்மணி அம்மை .நந்தியெம்பெருமான் அழகையும் அவசியம் கூற வேண்டும் .பெரிய திருமேனி .

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் உள்ளார் அகரம் மகாதேவர் ....மிகப்பெரிய நாகாபரணத்துடன் பிரம்மாண்டமாக கருவறையில் வீற்றிருக்கும் இப்பெருமானை விட்டு கண்கள் அகல மறுக்கிறது ..மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் எழில் மிகுந்த பருத்த திருமேனி ....

இவரை தரிசிக்கும் மாத்திரத்திலேயே நம் துன்பங்கள் யாவும் நம்மை விட்டு நீங்கும் உணர்வு மேலிடுகிறது .இவர் நமக்காகவே வந்தவர் .....மண்ணை பிளந்து கொண்டு வந்தவர் ....நம் துயர் துடைக்க வந்தவர்....

இவரை பாராமல் நாம் வாளாவிருக்கலாமா ?  
அகரம் மகா தேவரின் திருவடிகளை பற்றிக்கொள்ளுங்கள் ..
கொரானாவும் தலை தெறித்து ஓடும் ..

திரளாக வாருங்கள் அன்பர்களே........

பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ காலங்களில் எளிதாக தரிசிக்கலாம் இவரை .
மற்ற நாட்களில் அவசியம் கீழ்கண்ட அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தரிசிக்கலாம் ..
எண்கள் தந்துள்ளேன் ஏமாற்றத்தை தவிர்க்க ..

பக்தர்கள் வருகை குறைவான கிராம பகுதி என்பதால், அவர்களால் நாள் முழுதும் திருக்கோயிலை திறந்து வைத்துக்கொண்டிருக்க முடியாது என்ற நிதர்சனத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?

அலைபேசி எண்கள் :
9159055306
9894936427



முன்பிருந்த நிலை 



Saturday, March 27, 2021


அன்பர்களே ....நீங்கள் கோவிலுக்கு செல்ல எண்ணினால் இத்தகைய திருக்கோயில்களுக்கு செல்லுங்கள் .

நீங்கள் செலுத்தும் காணிக்கை எத்துனை சிறிதாயினும் இத்தகைய திருக்கோயிலுக்கு தட்டில் செலுத்துங்கள் ..

அவை உண்மையில் இறைவனை சென்றடையும் ...

ஆம் !.அன்பர்களே...
நம் சென்னைக்கு அருகில் இருக்கும் திருவள்ளூர் மாவட்டம் எண்ணிலடங்கா வெளிஉலகிற்கு தெரியவராத அதிசயங்களையும் அற்புதங்களையும் தன்னுள் அடக்கிய திருக்கோயில்களை தன்னகத்தே கொண்டுள்ளது .
சுற்றிலும் வயல் வரப்புகளும் , சிலு சிலுவென்ற காற்றும் நெஞ்சை அள்ள , அமைதியும் ஏகாந்தமும் கொண்டு ஈடில்லா ஆன்மீக அனுபவத்தை அள்ளித்தர காத்திருக்கின்றன அத்திருக்கோயில்கள் ....

வருவதற்கு நீங்கள் தயாரா? 

அப்படியெனில் வாருங்கள் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் , கடம்பத்தூர் பேரம்பாக்கம் வழியில் உள்ள கண்டிகை கிராமத்திற்கு ....

அங்கு பச்சைப்பசேல் வயல்களினூடே கோயில் கொண்டுள்ளார் மரகத லிங்கத்திருமேனி கொண்ட மரகத லிங்கேஸ்வரர் ...பச்சை மரகத கல்லினால் ஆனவர் ...அன்னை மரகத வள்ளி .

மிகப்பெரிய இத்தகைய மரகத திருமேனிகள் மிக அரிது ....பளபள வென்ற அவர் திருமேனியில் நாம் முகம் பார்க்கலாம் ...

அன்பர்களே இத்திருக்கோயில் திருப்பணியில் உள்ளது .இறைவன் மட்டுமே கருவறையில் குடிபுகுந்துள்ளார் இறைவி இன்னமும் மழையிலும் வெயிலிலும் காய்ந்தபடி தான் உள்ளார் .
இங்கு வர கண்டிகை பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும் ...ஸ்ரீராம் நகர் என்றும் சொல்கிறார்கள் பிரதான சாலையிலிருந்தே நீங்கள் கோவிலை காணலாம் .ஆயினும் சற்றே வயல் வரப்பில் நடந்து தான் வர வேண்டும் .சாலை வசதி இன்னமும் இத்திருக்கோயிலுக்கு ஏற்படுத்தி தரவில்லை ...

கண்டிகை என்ற பெயரில் அநேகம் ஊர்கள் உள்ளது . எனவே  புதுமாவிலங்கை கண்டிகை என்று கேட்டு இறங்குங்கள் .புதுமாவிலங்கையிலும் புராதனமான திருக்கோயில் ஒன்று உள்ளது .

நான் சென்றபோது ஒருவரும் இல்லாத நிலையிலும், ஜடா முடி தரித்த சாது ஒருவர் இப்பெருமானை கடமையே கண்ணாக , அபிடேகம் செய்து பூசித்து கொண்டிருந்தார்.

பக்தர்கள் வருகை இல்லாத நிலையிலும் அவர் ஒருவரையும் எதிர்பார்த்து காத்திருக்கவில்லை ..தான் உண்டு ....எம்பெருமான் உண்டு ......

அன்பர்களே அதனால் தான் சொல்கிறேன் ....கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு கொரானாவை வலிய வரவழைத்துக்கொள்ளாதீர்கள் ..

கிராமத்து கோயில்களுக்கு விஜயம் செய்யுங்கள் ..இறைவன் தங்கள் குறைகளை களைவதற்கு அங்குதான் விஸ்ராந்தியாக காத்துள்ளார் ..
மன ஆரோக்கியம் ..உடல் ஆரோக்கியம் இரண்டுக்கும் உத்திரவாதம் கிராமங்களில் தான் .
வெகு அருகில் அகரம் மகாதேவர் திருக்கோயில் உள்ளது ...திருப்பணி முடிவுபெற்று சிறப்புடன் விளங்கும் இத்திருக்கோயில் அலைபேசி எண்கள் கொடுத்துள்ளேன் .கண்டிகை திருக்கோயில் அலைபேசி எண் இல்லாததால். 

இவர்களை தொடர்பு கொண்டு நீங்கள் இரு கோவிலையும் தரிசிக்கலாம் .

அகரம் திருக்கோயில் 

9894936427
9159055306







Wednesday, March 24, 2021

 தடைகளை தகர்த்தெறியும் தன்னிகரற்ற திருத்தலம் .....நாகதோஷம் போக்கும் நாகமலீஸ்வரர் .

இழந்த பதவியை மீட்டெடுக்க அருள்புரியும் அம்பிகை ......

வேறென்ன வேண்டும் அன்பர்களே ......

.வாருங்கள் நல்லதையெல்லாம் நலமுற அளிக்கும் நாலூருக்கு ...

அசுரர்களான ராகுவும் கேதுவும் தேவர்களைப்போன்று வேடமணிந்து நயவஞ்சகமாக அமிர்தம் உண்ட காரணத்தினால்,சபிக்கப்பட்டு பூலோகம் வந்து,அலைந்து திரிந்து பின் நாரதரின் ஆலோசனையின் படி பல இடங்களில் சிவலிங்கப்பிரதிஷ்டை செய்து  வழிபட்டு வந்தனர் .

விமோச்சனம் பெற வழியின்றி களைத்த இருவரும்  இறுதியாக இத்தலம் வந்து சேர்ந்தனர் .

என்ன அதிசயம் ........மிக அழகான ஒரு தாடகத்தையும் அதன் நடுவே ஸ்வர்ணமயமாக பூத்திருக்கும் மல்லிகை பூக்களையும் கண்டு அதிசயித்து , அதன் அருகே சென்றபோது ஆஹா ...இது நாம் தேடி வந்த அன்னை ஸ்வர்ணாபிகையே என்று உணர்ந்தனர் ....

அருகே சுயம்புவாக எழுந்தருளியுள்ள நாகமலீஸ்வரரையும் கண்டு மனம் கசிந்துருகி வணங்கி சாப விமோசனம் பெற்று தேவலோகம் திரும்பினர்.

இது வரலாறாகும் .

பின்னர் ஆட்சி செய்த மன்னர்களால் மிகப்பெரிய திருக்கோயில் கட்டப்பட்டு, விழாக்கள் பல கண்டது இத்தலம் 

 பெருமை வாய்ந்த இச்சிவாலயம் காலப்போக்கில் சிதிலமடைந்தது . பின் அன்பர்களின் பெருமுயற்சியால் சீரமைக்கப்பட்டு , அற்புத நாக தோஷ நிவாரண தலமாக திகழ்கிறது.

நாலூர் எனப்படும் இத்தலம் சென்னை-கும்மிடிபூண்டி மார்கத்தில் மீஞ்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 1km இல்அமைந்துள்ளது. 

.கருவறையில் அற்புத லிங்கதிருமேனி கொண்டு எழிலுடன் அருட்காட்சி நல்குகிறார் நாகமலீஸ்வரர் ..

ஸ்வர்ணத்தினால் ஆன பூக்களில் தோன்றியமையால் அம்பிகை ஸ்வர்ணாம்பிகை என பெயருடன் விளங்குகிறாள் 

.அன்பர்களே மிக சிறந்த நாகதோஷ பரிகார, இழந்த பதவியை திரும்பப்பெறும் பரிகார தலமான இத்தலத்தை வாழ்வில் ஒருமுறையேனும் தரிசியுங்கள் 

பின் அதிசயங்கள் உங்கள் வாழ்வில் நிகழ்வதை நீங்கள் கண்கூடாக காணலாம் .

பிரதோஷம் உள்ளிட்ட அனைத்து வழிபாடுகளும் சிறப்பாக நடைபெறுகிறது இத்தலத்தில் .

அலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு மற்றைய நாட்களில் தரிசிக்கலாம் .


9444 320328

91769 67689

99407 68822