Monday, January 30, 2017

விடமுண்ட கண்டன் கொலு வீற்றிருக்கும் விடையபுரம் --திருவாரூர் மாவட்டம் 


அன்பர்களே, மிக மிக தூய்மையான எண்ணெய் பிசுக்கற்ற திருகோவிலை காண வேண்டுமா?
இறை திருமேனிகளின் வஸ்திரங்கள் , மடிப்பு கலையாமல் ,இஸ்திரி செய்யப்பட்டது போல் நேர்த்தியாக மடித்து வைக்கப்பட்டிருக்கும் அழகை காண உங்களுக்கு விருப்பமா?
கம்பீரமான மிகப்பெரிய இறைவுருவங்கள் கொலுவீற்றிருக்கும் திருகோயிலை பார்க்க விரும்புகிறீங்களா?
அனைத்திற்கும் மேலாக மகா பெரியவா ஆராதித்த மகத்தான சிவாலயத்தை காண ஆசையா?
அப்படியென்றால் நீங்கள் செல்ல வேண்டியது , திருவாரூர் மாவட்டம் , குடவாசல் வட்டம் , கொரடாச்சேரி( 4 கிலோமீட்டர் )அருகில் உள்ள விடயபுரம் கிராமத்திற்கு.

இச்சிறிய கிராமத்திலும் அதன் அருகிலும் எண்ணற்ற திருகோயில்கள் விளங்குகின்றன.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட "திருவிடைவாய்" தலம் இதன் அருகில் தான் உள்ளது .

மிக்க வேதனை என்னவென்றால், இறைவன் அருள்செய்ய காத்திருந்தாலும், அவன் அருளை பெற பக்தர்கள் தயாராக இல்லை என்பதுதான் . அடியார் பெருமக்கள் அவசியம் காண வேண்டிய அற்புத திருகோயில் இது .

அர்ச்சகர் வீடு இத்திருகோயில் எதிரிலேயே அமைந்துள்ளது .

இப்பெருமான் மீது அளவற்ற பக்தி கொண்ட அன்பர் திரு குமார் கண்ணும்  கருத்துமாக இத்திருக்கோயிலை பேணி  வருகிறார் ....இவரது அலைபேசி எண் தந்துள்ளேன் ....

இவரிடம் தொடர்பு கொண்டு இத்திருக்கோயிலை நீங்கள்  வசதியாக தரிசனம் செய்யலாம் ...

இங்கு உறையும் மீனாட்சி கம்பீரமான பேரழகு பொருந்தியவள் ....
இவளுக்கு திரு குமார் அவர்கள் செய்யும் அலங்காரம் காண கண் கோடி வேண்டும் அன்பர்களே ....

தவற விடாதீர்கள் ....
கண் நோய்கள் தீர்க்கும் கண் கொடுத்த வணிதம் தலம் மிக அருகில் இருக்கிறது ....

சென்று பலன் அடையலாம் .

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் விடையபுரம், கண்கொடுத்த வனிதம் அஞ்சல், கமலாபுரம் வழி, குடவாசல் தாலுகா, திருவாரூர்- 610102.
திரு குமார் அவர்கள்
Contact No: 98 65 70 66 51





Wednesday, January 25, 2017

ஆபத்துகளை களைவார் ஆபத்சகாய ஈஸ்வரர் ........

அன்பர்களே .....திருவள்ளூர் மாவட்டம் , திருவள்ளூர் ஆவடி மார்க்கத்தில் உள்ள புட்லூர் நிறுத்தத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தண்ணீர் குளம் கிராமம் .....

இங்கு பன்னெடுங்காலமாக வானமே கூரையாக வீற்றிருந்து அருள்பாலித்து வந்தார் ஸ்ரீ ஆபத்சகாய ஈஸ்வரர் ....
எத்தனை ஞானியர் , மகான்கள் வழிபட்டிருப்பர் இப்பெருமானை ?
இன்று அருகில் உள்ள அடியார் திரு உதயகுமார் அவர்கள் தினசரி பூசைகளை கவனித்து வருகிறார்....

இப்பெருமானுக்கு திருக்கோயில் அமைத்திட நீண்ட காலமாக முயற்சித்து வருகிறார் ......

பெருமான் திருவுளம் கனிந்திட தற்போது திருப்பணி துவங்கப்பட்டுள்ளது .....

இத்திருப்பணிக்கு பொருள் உதவி தேவை படுகிறது ......கிடைத்தற்கரிய இந்த சந்தர்ப்பத்தை அன்பர்கள் பயன் படுத்தி கொள்ளுமாறு வேண்டுகிறோம் ....ஏனெனில் சிவாலய திருப்பணி நம் ஜென்ம ஜென்மாந்திர பாவங்களை நீக்கக்கூடியது ....

வங்கி கணக்கு எண் கொடுக்கப்பட்டுள்ளது .....
M.udhayakumar  SBI bank thirunindravur branch A no 30330231064 IFSC code no
Ifsc code no SBI 010666

அலைபேசி எண் :9941496440



Wednesday, January 18, 2017

அற்புத பலன்களை அள்ளி  வழங்கும் அரிய திருக்கோயில்கள் 1

நவக்கிரஹ தோஷங்களை அடியோடு நீக்கும் திருத்தலம் .....
பிரம்மன் தான் பெருமானின் சிரசை கண்டதாக பொய்கூறியதால் ஏற்பட்ட தோஷத்தை இத்தலத்தில் தீர்த்தம் உண்டாக்கி , இறைவன் பிரம்மபுரீஸ்வரரை வணங்கி போக்கிக்கொண்டான்.

எனவே இறைவன்பிரம்மபுரீஸ்வரர் எனஅழைக்கப்படுகிறார்...
நவக்ரஹங்களும் தங்கள் சாபத்தை நிவர்த்திசெய்து கொண்டன...
இங்கு நவக்ரகங்கள் ஒரே நேர்கோட்டில் இறைவனை எதிநோக்கி அமைந்திருப்பது சிறப்பு.....

சப்த விடங்க தலங்களில் திருக்குவளையும் ஒன்று.


திருக்கோளிலி எனப்படும் இத்தலம் தற்போது திருக்குவளை என அழைக்கப்படுகிறது .....
கோள்களால் ஏற்படும் தோஷங்களை நீக்குவதால் இப்பெயர் பெற்றது .....

இறைவன் மணலால் ஆன சுயம்பு லிங்கம் ..
இத்தகைய பழமையும் புராதன பெருமையும் உடைய திருத்தலங்களை தேடி தேடி சென்று தரிசித்தால் துன்பங்கள் நம்மை அண்டுவதற்கும் அஞ்சும் ......

அன்பர்களே சென்று தரிசனம் செய்யுங்கள் 

திருக்குவளை, திருத்துறைப்பூண்டியிலிருந்து கச்சனம் வழியாக எட்டுக்குடி செல்லும்வழியில்உள்ளது...




Friday, January 6, 2017

உருக்குலைந்த நிலையில் உமையொரு பாகன் திருகோயில்.
அன்பர்களே, தஞ்சை மாவட்டம் , பாபநாசம் அருகில் கோபுராஜபுரம் என்னும் சிற்றூர் உள்ளது.பாபநாசம் ரயில் பாதையை கடந்து ஒரு கிலோமீட்டர் நடந்து செல்ல இந்த கிராமத்தை அடையலாம் 
இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் திருநாமம் ஸ்வர்ணபுரீஸ்வரர் என்பதாகும் .இன்று மிகவும் 
உருக்குலைந்த நிலையில் உள்ளது .

தனித்து விளங்கும் இறைவியின் திருகோயில் முற்றிலும் சிதைந்து விட்டதால் எம்பெருமானுடனேயே எழுந்தருள செய்துள்ளார்கள் .

இங்கு அருள்பாலிக்கும் குபேர லிங்கத்தை உள்ளன்புடன் வழிபட, வறுமை நீங்கி வாழ்வில் வளம் பெறலாம்
என உறுதியுடன் கூறுகிறார்கள் உள்ளூர் பெருமக்கள் .

பழமையும் பெருமையும் பொருந்திய இத்திருகோயில் விரைவில் சீரமைக்கப்பட வேண்டும் என்பதே
அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது 



Thursday, January 5, 2017

காசிக்கு நிகரான காலபைரவ ஷேத்திரம் ......



காசிக்கு நிகரான தலங்கள் , காசிக்கு வீசம் அதிகமான தலங்கள்  என பல தலங்கள் அறியப்பட்டதுண்டு .....

காசியில் இறப்பவர்க்கு எம வாதனை கிடையாது ....ஆனால் பைரவ தண்டனை உண்டு ...
ஆனால் இங்கு வந்து சப்த ரிஷிகள் வழிபட்ட ஞானாம்பிகை சமேத  ரிஷீஸ்வரரை வணங்கினால் , இங்கு உறையும் பைரவரை வழிபாடு செய்தால் இவை இரண்டுமே கிடையாது ....

இதன் மூலம் இத்தலத்தின் பெருமையை அறியலாம்....

அத்தலம் தான் குடந்தை அருகில் மயிலாடுதுறை செல்லும் வழியில் அமைந்துள்ள அம்மாசத்திரம் ஆகும் ....

அருகிலேயே திருபுவனம் ,  .திருவிடைமருதூர் போன்ற புகழ் மிக்க தலங்கள் சூழ அமைந்துள்ளது .....

இங்கு கம்பீரமாக வீற்றிருக்கும் கால பைரவ பெருமானுக்கு தேய்பிறை அஷ்டமி நாளில் 11 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது .....அவ்வமையம் திரளான மக்கள் கலந்து கொண்டு பலன் பெறுகிறார்கள் ....

காசியை போலவே  கும்பகோணத்திலும் 8 திக்குகளிலும் 8 விதமான பைரவர்கள் அருள்பாலிக்கின்றனர் ....
சப்த ரிஷிகளும் சிவபெருமானுக்கு திருமணம் செய்வித்த தலம் என்பதால் , இது திருமண தடை நீக்கும் தலமாகவும் விளங்குகிறது ....

அன்பர்களே , பிதுர் கடன்களை முறையாக செய்ய தவறியவர்கள் இங்கு வந்து வணங்குவதன் மூலம் அதனை நிவர்த்தி செய்து கொள்ளலாம் ...

இத்தலத்தின் பெருமை பவிஷ்ய புராணத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது ...
மிகவும் சுத்தமாகவும் , நேர்த்தியாகவும் பராமரிக்கப்படும் திருக்கோயில்களில் அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் திருக்கோயிலும் ஒன்றாகும்..

இத்திருக்கோவிலில் உள்ள காலபைரவரின் வாகனத்தின் முகம் வடக்கு நோக்கி இருப்பது வேறு எங்கும் இல்லாத விசேஷ அம்சமாகும்

திருக்கோவிலின் சிறப்புமிக்க அம்சங்கள்:

• சப்தரிஷிகள் சிவபெருமானுக்கு திருமணம் பேசி முடித்த திருத்தலம்.
• பஞ்சலிங்கங்கள் மற்றும் பஞ்சசக்திகள் அருள்பாலிக்கும் திருத்தலம்
• நவகிரஹ இயந்திர மண்டலம் விளங்குவது ஆகியவை ஒரே கோவிலில் அமைந்திருப்பது என்பது இத்திருத்தலத்தின் சிறப்பு.

 இங்கு இறைவன் அஷ்ட பைரவ ரூபியாக  இருந்து கும்பகோணத்தை காவல் காப்பதாக சம்பிரதாயம் உண்டு.
குடந்தையிலிருந்து 7 கிலோமீட்டரில் உள்ளது இத்தலம் 


இத்தகைய  பெறற்கரிய இத்தலத்தை குடந்தை செல்லும் அன்பர்கள்  தவறாமல் தரிசனம் செய்து பலன் பெற வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு ..